குலசேகரன்பட்டினத்தில் 6 சென்டிமீட்டர் மழை பதிவு: உடன்குடியில் வாரச்சந்தையில் தண்ணீர் புகுந்தது
- சேர்வலாறு அணை நீர்மட்டம் 120 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 75.35 அடியாகவும் உள்ளது.
- வியாபாரிகளும், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் கடும் அவதி அடைந்தனர்.
உடன்குடி:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டங்களில் கனமழை பெய்தது. நேற்று மாலை வரையிலும் கனமழை பெய்வதும். பின்பு மழை தணிவதுமாக இருந்தது. அங்குள்ள காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக நாலுமுக்கு எஸ்டேட்டில் 37 மில்லிமீட்டரும், மற்ற 2 பகுதிகளிலும் தலா 32 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, களக்காடு, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. அதிக பட்சமாக சேரன்மகாதேவியில் 11.60 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அணைகளை பொறுத்தவரை பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில்1 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணையின் நீர்மட்டம் 108 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 854 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 504 கனஅடி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 120 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 75.35 அடியாகவும் உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் ஆய்குடி, தென்காசி, சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. கடனா மற்றும் ராமநதி அணை பகுதிகளிலும் மிதமான மழை பெய்ததால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன. குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்டவற்றில் அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குலசேரகன்பட்டினத்தில் பலத்த மழை பெய்தது. அங்கு இன்று காலை நிலவரப்படி 60 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. எட்டயபுரம், சூரன்குடி, வைப்பார், விளாத்திகுளம், கீழ அரசடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
உடன்குடி பகுதியில் நேற்று திடீரென பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. மணப்பாடு, சிறுநாடார் குடியிருப்பு, மெய்யூர், தேரியூர், மாதவன்குறிச்சி, பிச்சிவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்தது. கனமழையால் வாரந்தோறும் திங்கட்கிழமை செயல்படும் உடன்குடி வாரச்சந்தைக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் வியாபாரிகளும், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் கடும் அவதி அடைந்தனர்.