கனமழை எச்சரிக்கை எதிரொலி: தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை
- மீன்வள துறையின் மூலம் மறு அறிவிப்பு வரும்வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
- மாவட்டத்தில் மொத்தம் உள்ள 467 விசைப்படகு மற்றும் 3,788 நாட்டுபடகுகள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்மேற்கு வங்ககடல் பகுதி மற்றும் அதளை ஒட்டிய இலங்கை கடற்பகுதி, தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடற்பகுதிகளில் சுழல்காற்றானது மணிக்கு 40 முதல் 45 கிலாமீட்டர் வேகம் வரை வீசுவதுடன் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது, எனவே மீன்வள துறையின் மூலம் மறு அறிவிப்பு வரும்வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், குறிப்பிட்ட பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மீன்வளத்துறையின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 265 விசை படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் இன்று மீன் பிடிக்க செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோல் மாவட்டத்தில் பெரிய தாழை முதல் வேம்பார் வரை மீன்பிடிக்க மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 467 விசைப்படகு மற்றும் 3,788 நாட்டுபடகுகள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.