சேலம் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கொட்டிய கன மழை- மக்கள் மகிழ்ச்சி
- வெயிலின் தாக்கத்தாலும், வெப்ப அலை வீசுவதாலும் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
- சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சே ர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஏற்காட்டில் இன்று காலை முதலே குவிந்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி முதல் நேற்று வரை தொடர்ந்து 48 நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இதில் குறிப்பாக கடந்த 2-ந் தேதி அதிக பட்சமாக 108 டிகிரி வெயில் பதிவானது நிலையில் நேற்று 105 .5 டிகிரி வெயில் பதிவானது.
வெயிலின் தாக்கத்தாலும், வெப்ப அலை வீசுவதாலும் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்டு வந்தனர். அதனால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினர்.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. பல மாதங்களுக்கு பிறகு பெய்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக இந்த மழை காடையாம்பட்டி, மேட்டூர், சேலம் மாநகர், ஆனைமடுவு , ஏற்காடு உள்பட பல பகுதிகளில் கன மழையாக ஒரு மணி நேரத்திற்கும் மேல் கொட்டியது. இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. மேலும் கோடை காலத்தில் பெய்த இந்த மழை விவசாய பயிர்களுக்கும் உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்காட்டில் நேற்றிரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாரல் மழை பெய்தது. மழையை தொடர்ந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சே ர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஏற்காட்டில் இன்று காலை முதலே குவிந்தனர்.
சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கிச்சிப்பாளையம், தாதாகாப்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி என பெரும்பாலான பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையை தொடர்ந்து வீசிய குளிர்ந்த காற்றால் கடந்த சில மாதங்களாக கடும் உஷ்ணத்தில் தவித்த பொதுமக்கள் இன்று அதிகாலை நிம்மதியாக தூங்கினர்.
மாவட்டத்தில் அதிக பட்சமாக காடையா ம்பட்டியில் 34 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மேட்டூர் 23.6, சேலம் 20.3, ஆனைமடுவு 17, ஓமலூர் 16, ஏற்காடு 13, சங்ககிரி 9, பெத்தநாயக்கன்பாளையம் 3.5, கரிய கோவில் 2, எடப்பாடி 1.4 மி.மீ. மழை என மொத்தம் 139.80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.