தமிழ்நாடு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Published On 2022-06-07 04:01 GMT   |   Update On 2022-06-07 04:01 GMT
  • காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
  • ஒகேனக்கல் அருவிக்கு செல்லும் நுழைவு வாயில் பூட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பென்னாகரம்:

கடந்த சில தினங்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக வந்தது.

இந்த நிலையில் கர்நாடக பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழக நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டு, ராசிமணல், கேரட்டி, நாட்றாம்பாளையம், ஓசூர் மற்றும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கன மழை பெய்துள்ளது.

இதன் காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து சற்று அதிகரித்தது.

இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஒகேனக்கல் அருவிக்கு செல்லும் நுழைவு வாயில் பூட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனால் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க கூடாது. படகுகளை இயக்கவோ, படகு சவாரி செய்யவோ கூடாது என இன்று தருமபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவிட்டார்.

மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பொதுமக்களின் நலன் கருதி முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

தமிழக கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து அளந்து கண்காணித்து வருகின்றனர்.

இதனால் ஊட்டமலை, சத்திரம், நாடார் கொட்டாய் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறும்படி போலீசார் அறிவுறுத்தினர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார், ஊர்க்காவல் படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News