தமிழகத்தில் கள்ளுக்கடைகளை திறந்தால் பூரண மதுவிலக்கு சாத்தியமே- அண்ணாமலை
- பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்தார்.
- கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் பலியான சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது.
கோவை:
கோவை ஈஷா யோகா மையத்தில் 10-வது சர்வதேச யோகா தினம் இன்று நடந்தது. இதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் பலியான சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. மரப்பட்டடைகள், பழங்கள், உள்ளிட்டவை மூலம் சாராயம் தயாரிக்கப்படுவதில்லை. முழுக்க, முழுக்க ரசாயனங்களை கொண்டு தான் சாராயம் தயாரிக்கப்படுகிறது.
கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கும், அதை அழிப்பது குறித்தும் தீர்வு காண வேண்டிய கட்டாய சூழலில் நாம் இருக்கிறோம்.
நாங்கள் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. அவர்களது உறவினர்களுக்கு தான் பணம் கொடுக்கிறோம். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினர் நிராதரவாக நிற்கின்றனர். அவர்களுக்கு தான் நிவாரணம் வழங்கி வருகிறோம்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது எதார்த்தத்தில் சாத்தியமில்லை. ஆனால் கள்ளுக்கடைகள் திறந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமே.
கள்ளுக்கடைகளுக்கு என தனி லைசென்ஸ் கொடுக்கப்பட்டு, அதில் தனி கவனம் செலுத்தப்பட்டு முறைப்படுத்தினால் மதுவிலக்கு சாத்தியம் தான்.
கள்ளுக்கடைகள் திறந்தால் பூரண மதுவிலக்கு சாத்தியம் என்பதை பீகார் மாநிலம் நிரூபித்து காட்டியுள்ளது. கேரள அரசு அதற்கான முயற்சியில் உள்ளது. எனவே தமிழகத்திலும் கள்ளுக்கடைகள் திறந்தால் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியம் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.