நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறப்போம்- சீமான்
- கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடியை அழைத்து ஏன்?
- முதலமைச்சர் ஆவதற்காக தான் கட்சியை ஆரம்பித்து இருக்கிறேனே தவிர முச்சந்தியில் நிற்க கிடையாது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காமராஜர் சிலை அருகே நாம் தமிழர் கட்சி சார்பில், முத்துக்குமார் 15-வது ஆண்டு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று முத்துக்குமார், பழனிபாபா உருவ படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-
கட்சி தொடங்கிய அன்று முதல் இன்று வரை கூட்டணி இல்லை என்றும் தனித்து தான் எங்கள் பயணம் தொடர்கிறது. மக்களை நம்புகிறோம். எங்களை மக்கள் கைவிடமாட்டார்கள். தோற்றாலும், வெற்றி பெற்றாலும் தனித்து தான் என்று வரலாறு பேசும். நாம் தமிழர் கட்சிக்கு கூடும் கூட்டத்தை கண்டு மற்ற கட்சிகள் கலக்கம் கொள்கின்றனர்.
இது கொள்கைக்காக கூடும் கூட்டம். தி.மு.க. என்பது கட்சி கிடையாது. அது ஒரு கம்பெனி. கருணாநிதி குடும்பத்தின் சொத்து. ஒரு ரூபாய் காசு கொடுக்காமல் மற்ற கட்சிகளால் ஓட்டோ அல்லது கூட்டத்தையோ கூட்ட முடியாது. நாம் தமிழர் செய்வது தான் புரட்சி.
தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் 2026-க்கு பிறகு ஒரு குச்சியாக கூட இருக்காது. ஒத்தையடி பாதையில் செல்லும் என்னை 8 வழிச்சாலையில் அழைத்துச் செல்வது தி.மு.க., பா.ஜ.க. தான். ஒரு தீவிரவாதியாகவோ, பயங்கரவாதியாக என்னை மாற்றி விடாதீர்கள், ஜனநாயகவாதியாகவே என்னை வைத்து பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடைகளை (பனை-தென்னை பால்) திறப்போம். டாஸ்மாக் கடைகளை மூடுவோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னதை நிறைவேற்றி விட்டார்களா? கூட்டுறவு வங்கியில் வைத்த நகைக் கடன் தள்ளுபடி செய்து விட்டார்களா?.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடியை அழைத்து ஏன்? கேலோ என்பது இந்தியில் விளையாட்டு என்று அர்த்தம். இந்தி தெரியாது போடா என்று கூறியவர்கள், ஆட்சிக்கு வந்ததும் இந்தியை வாடா என்கின்றனர். முதல்-அமைச்சர் ஆவதற்காக தான் கட்சியை ஆரம்பித்து இருக்கிறேனே தவிர முச்சந்தியில் நிற்க கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.