வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்தது ஏன்? உயர் நீதிமன்றம் விளக்கம்
- வேலுமணிக்கு எதிராக ஆதாரங்களை கண்டுபிடித்தால் அவரை வழக்கில சேர்க்கலாம்.
- ஆட்சிமாற்றத்திற்குப் பின் மீண்டும் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியது ஏன்? என நீதிமன்றம் கேள்வி
சென்னை:
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதே சமயம், அவர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இது தொடர்பான 48 பக்க தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:
டெண்டர் ஒதுக்கீட்டில் வேலுமணி செல்வாக்கை செலுத்தினார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. முறைகேடு நடந்ததாக நேரடியாக வழக்கு பதியாமல் லஞ்ச ஒழிப்புத்துறை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. எனவே, வழக்கு ரத்து செய்யப்படுகிறது. அதிகாரிகள் தவறால் அல்லாமல் வேலுமணி செல்வாக்கால் முறைகேடு நடந்ததாக நிரூபித்திருந்தால் வழக்கு ரத்து செய்யப்பட்டிருக்க மாட்டாது. டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, தொடர்ந்து விசாரித்து வேலுமணிக்கு எதிராக ஆதாரங்களை கண்டுபிடித்தால் அவரை வழக்கில சேர்க்கலாம். ஆட்சி மாற்றத்திற்குப் பின் மீண்டும் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியது ஏன்?
அரசியல் கட்சிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் தலையீட்டில் இருந்து காவல்துறையை விடுவிக்க வேண்டும்.
தேர்தலின்போது தாக்கல் செய்த சொத்து விவரங்களின் அடிப்படையில் வேலுமணி மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளதால் ரத்து செய்ய முடியாது, என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.