தமிழ்நாடு

மத்திய இணை மந்திரி வி.கே. சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி.

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது- மத்திய மந்திரி வி.கே.சிங் பெருமிதம்

Published On 2023-06-28 10:26 GMT   |   Update On 2023-06-28 10:26 GMT
  • பொருளாதார வளர்ச்சியில் 10-வது இடத்தில் இருந்து வந்த இந்தியா பா.ஜ.க.வின் 9 ஆண்டு ஆட்சி காலத்தில் 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
  • சிறு தொழில் முனைவோருக்காக வழங்கப்படும் முத்ரா கடன் வழங்கப்பட்டதன் மூலம் 76 லட்சம் பேர் புதிய வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

நெல்லை:

நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தில் மத்திய இணை மந்திரி வி.கே. சிங் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

கடந்த 2014-ல் இந்தியாவில் 74 விமான நிலையங்கள் இருந்தது. ஆனால் மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இந்த 9 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் புதியதாக கொண்டு வரப்பட்டுள்ளது.

கன்னியாகுமாரியில் புதிய விமான நிலையம் அமைப்பதில் தொழில்நுட்ப பிரச்சனைகள் இருக்கிறது. அது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம். காரைக்குடியிலும் விமான நிலைய அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலைய விரிவாக்கம், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், மதுரை விமான நிலைய விரிவாக்கம் போன்றவை நடந்து வருகிறது.

இந்தியா பொருளாதார வளர்ச்சி, அரசியல் மேம்பாடு மற்றும் சமுதாய மேம்பாட்டில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. 2014-ல் இருந்ததைவிட இந்தியா கடந்த 9 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி உள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் 10-வது இடத்தில் இருந்து வந்த இந்தியா பா.ஜ.க.வின் 9 ஆண்டு ஆட்சி காலத்தில் 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. கடந்த 2015-ல் 428 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருந்த நிலை மாறி இந்த 9 ஆண்டுகளில் 86 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளது. புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்குவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. டிஜிட்டல் இந்தியா தொடர்ந்து வளர்ச்சியை எட்டி வருகிறது.

80 கோடி பேருக்கு நபர் ஒன்றுக்கு 5 கிலோ விதம் கொரோனா காலத்தில் இருந்து தற்போது வரை தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு வேலை வாய்ப்பு வழங்குவதை விளம்பரப்படுத்துவ தில்லை. 4 சதவீதம் பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்க முடியும். மீதம் உள்ள நபர்களுக்கு தனியார் மூலமாக வேலை வாய்ப்புகள் வழங்க முடியும்.

ஒரு வருடத்திற்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக உறுதி அளித்தோம். ஆனால் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறு தொழில் முனைவோருக்காக வழங்கப்படும் முத்ரா கடன் வழங்கப்பட்டதன் மூலம் 76 லட்சம் பேர் புதிய வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட கூடுதல் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு மட்டுமே நிதி ஒதுக்குகிறது. பணிகள் முழுவதும் மாநில அரசால் செய்யப்படுகிறது. இந்த பணிகளில் தவறு மற்றும் குறைபாடு இருந்தால் மத்திய அரசு அதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்.

தாமிரபரணி நதியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க பொதுமக்கள் அமைப்புகளாக கூடி கழிவுகள் கலக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசு முயற்சித்தால் மட்டும் தாமிரபரணி நதியில் கழிவுகள் கலப்பதை தடுக்க முடியாது, பொதுமக்களும் ஒன்றிணைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட தலைவர் தயா சங்கர் உடன் இருந்தார்.

Tags:    

Similar News