தமிழ்நாடு

பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் தூக்கு பாலம் பொருத்தும் பணி தீவிரம்

Published On 2024-04-28 05:31 GMT   |   Update On 2024-04-28 05:31 GMT
  • பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
  • வரும் செப்டம்பர் மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்கிட பணிகள் தீவிர மடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் 2.2 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் 1914-ம் ஆண்டு கப்பல்கள் வந்து செல்ல திறந்து மூடும் வகையில் மீட்டர் கேஜ் ரெயில் பாதை அமைக்கப்பட்டது.

இந்த வழித்தடத்தில் தொடர்ந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் 2007-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதை மாற்றப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு ரெயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் 2019-ம் ஆண்டு ரூ.560 கோடி மதிப்பிட்டில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் தூக்கி இறக்கும் வகையில் புதிய ரெயில் பாலம் கட்டுமான பணி தொடங்கியது.

இதில் மண்டபத்தில் இருந்து பாலத்தின் மையப் பகுதி வரை ரெயில் தண்டவாளங்கள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது. பாம்பனில் இருந்து மையப் பகுதி வரை பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் மையப்பகுதியில் அமைக்கப்படும் தூக்கி இறக்கும் பாலம் 600 டன் எடை உள்ளதால் கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்களுக்குள் அந்த பணி நிறைவடைந்து அதிக குதிரை திறன்கொண்ட மின் மோட்டர் மூலம் தூக்கி இறக்கிடும் வகையில் இணைப்புகள் பொருத்தப்பட்டு அதற்கான பணிகள் நடைபெறும்.

இதன் பின்னர் பாம்பன் பகுதியில் இருந்து மையப் பகுதிக்கு தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறும் என ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் வரும் செப்டம்பர் மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்கிட பணிகள் தீவிர மடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News