தமிழ்நாடு (Tamil Nadu)

தொப்புள் கொடி வீடியோவை யூட்யூபில் இருந்து நீக்கினார் இர்பான்

Published On 2024-10-21 13:08 GMT   |   Update On 2024-10-21 13:08 GMT
  • உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவ்யூ செய்வதன் மூலம் பிரபலமானவர் இர்பான்.
  • மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டு இர்பான் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவ்யூ செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.

யூடியூபர் இர்பானுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தோடு சேர்ந்து சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இர்பான் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருக்கும்போது, துபாயில் ஸ்கேன் எடுத்து பார்த்தார். இர்பான், தனக்கு பெண் குழந்தை பிறக்கப் போவதாக அறிவித்தார்.

பாலினத்தை அறிவித்தது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால், அவர் மீது வழக்கு பதிவு செய்ய இருந்த நிலையில், மன்னிப்பு கேட்டதால் அவர் மீதான நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் குழந்தை பிறக்கும்போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை யூடியூபர் இர்பான் வெளியிட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தவறு. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி தவறு என இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து மருத்துவத்துறை அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில், தொப்புள் கொடி வீடியோவை தனது யூட்யூபில் இருந்து இர்பான் நீக்கியுள்ளார்.

இந்த வீடியோ நீக்கப்படுவதற்கு முன்பு வரை சுமார் 16 லட்சம் பேர் அதனை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News