கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் ரூ.30 லட்சமாக உயர்வு
- சம்பளக்கடனை பொறுத்தமட்டில் அதிகபட்ச கடன் தொகையாக ரூ.7 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.15 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
- கடனை திரும்ப செலுத்துவதை பொறுத்தமட்டில் ஏற்கனவே இருந்து வந்த காலவரம்பான 350 நாட்கள் என்பதில் மாற்றம் இல்லை.
சென்னை:
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் அனைத்து வகை கடன்களையும் உயர்த்தி வழங்க கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி, நகைக்கடன் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.30 லட்சம் வரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதேவேளையில் ஓராண்டுக்குள் இந்த கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்ற காலவரம்பில் மாற்றம் இல்லை. சம்பளக்கடனை பொறுத்தமட்டில் அதிகபட்ச கடன் தொகையாக ரூ.7 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.15 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
இந்த கடனை பொறுத்தமட்டில் 84 மாதங்களுக்குள் திரும்ப செலுத்த வேண்டும் என்ற காலவரம்பு 120 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோன்று சிறு வணிக கடனாக ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த கடன் தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கடனை திரும்ப செலுத்துவதை பொறுத்தமட்டில் ஏற்கனவே இருந்து வந்த காலவரம்பான 350 நாட்கள் என்பதில் மாற்றம் இல்லை.
ரூ.50 ஆயிரம் வரையிலான தனிநபர் கடனுக்கு ஒரு நபர் ஜாமீன் உத்தரவாதமும், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலான தனிநபர் கடனுக்கு 2 பேர் ஜாமீன் உத்தரவாதமும் அளிக்க வேண்டும் என்றும், ஜாமீன் உத்தரவாதம் வழங்கும் நபர்கள் அரசு அல்லது தனியார் துறையில் சம்பளம் பெறும் பணியாளராகவும், பான் கார்டு உள்ளிட்ட இதர ஆவணங்களை கொண்டவராக இருக்க வேண்டும் என்றும் கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.