கள்ளச்சாராய உயிரிழப்பு எதிரொலி: தொழிற்சாலைகளில் மெத்தனால் இருப்பை கண்காணிக்க உத்தரவு
- பல தொழிற்சாலைகளில் மெத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
- வெளி நபர்களுக்கு மெத்தனால் விற்பனை செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கோவை:
கள்ளக்குறிச்சி மாவட்ம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 40-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தின் வேறு எந்த பகுதியிலாவது கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுகிறதா என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கள்ளச்சாராயத்தில் மெத்தனால் என்ற வேதிப் பொருளை அதிகளவில் சேர்த்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதால் மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தொழில் நகரமான கோவை மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அதில் பல தொழிற்சாலைகளில் மெத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
எனவே இந்த மெத்தனால் வேதிப்பொருளை உரிய முறையில் கையாளும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள 11 தொழிற்சாலைகளின் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கோவைமாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மெத்தனால் இருப்பை முறையாக கண்காணிப்பது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டன. வெளி நபர்களுக்கு மெத்தனால் விற்பனை செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.