தமிழ்நாடு

மாணவி ஸ்ரீமதியின் உடலை நாளைக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்- பெற்றோருக்கு ஐகோர்ட் உத்தரவு

Published On 2022-07-22 06:06 GMT   |   Update On 2022-07-22 06:06 GMT
  • மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுங்பதாக அரசு வழக்கறிஞர் முறையீடு
  • 3 பேர் கொண்ட ஜிப்மர் மருத்துவக் குழு பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்ய உத்தரவு

சென்னை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் பிரேத பரிசோதனையின்போது, தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என மாணவியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என தெரிவித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

அதன்பின்னர் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முறையீடு செய்தார் . அப்போது மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பதாகவும், உடலை வாங்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மாணவியின் உடல் பிரேத பரிசோதனை தொடர்பான அறிக்கைகள், மற்றும் பிரேத பரிசோதனையின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஆகியவற்றை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்படைக்க வேண்டும் என்றும், 3 பேர் கொண்ட ஜிப்மர் மருத்துவக் குழு, இந்த அறிக்கைகளை ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும என்றும் உத்தரவிட்டார்.

மேலும், மாணவியின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்றுக்கொண்டு கண்ணியமாக உடலை அடக்கம் செய்யும்படி பெற்றோருக்கு நீதிபதி உத்தரவிட்டார். உடலை பெற்றுக்கொள்வது தொடர்பாக இன்று மதியம் 12 மணிக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும் என்றும் பெற்றோர் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். நாளை 11 மணிக்குள் உடலை பெற்றுக்கொள்ளாவிட்டால் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

Tags:    

Similar News