தமிழ்நாடு

குடிக்காதே என்று சொல்ல முடியாது, மிதமாக குடி என சொல்லலாம்: கமல்ஹாசன் கருத்து

Published On 2024-06-23 12:57 GMT   |   Update On 2024-06-23 12:57 GMT
  • கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 55-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
  • ஒரு தெருவில் மருந்துக்கடைகளை விட அதிக டாஸ்மாக் கடைகள் உள்ளன என்றார் கமல்ஹாசன்

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 55-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கமல்ஹாசன் கேட்டறிந்தார். அதன்பின், செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்ஹாசன் கூறியதாவது:

இந்தத் தருணத்தில் இதை அரசியல் ஆதாயமாகவோ, விமர்சனமாகவோ பார்க்கக் கூடாது. அனைவருக்கும் கடமை உள்ளது.

ஒரு தெருவில் இருக்கவேண்டிய மருந்துக்கடைகளை விட அதிக டாஸ்மாக் கடைகள் உள்ளன.

குடிக்காதே எனும் அறிவுரை சொல்வதை விட, மிதமாக குடியுங்கள். உங்கள் உயிர் தான் முக்கியம் என அறிவுரை செய்யலாம்.

இதுபோன்ற விழிப்புணர்வு பதாகைகள் டாஸ்மாக் கடை அருகில் இருக்க வேண்டும்.

மதுக்கடைகளை இழுத்து மூட வேண்டும் என்பது தவறான கருத்து. இதற்கு உலகத்தில் பல முன்னுதாரணங்கள் உள்ளது.

வருமானம் ஈட்டும் எந்த அரசும் அதை திரும்பவும் மக்களுக்கு போய்சேரும் ஒரு நற்பயனை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

விஷ சாராயம், கள்ளச்சாராயம், மது உள்ளிட்டவை ஆபத்து என்பதை மக்களின் மனதில் படும்படி எடுத்துச்சொல்லும் அறிவுரைகள் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News