பழனி கோவிலில் கந்த சஷ்டி விழா: நவ.2-ல் காப்புக்கட்டுதலுடன் தொடக்கம்
- முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் 7ம் தேதி நடைபெறுகிறது.
- திருக்கல்யாணம் நவ.8-ம் தேதி நடைபெறும்.
பழனி:
பழனி அறுபடை வீடுகளின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்றாகும். இந்த வருடத்திற்கான கந்தசஷ்டி விழா நவ.2-ம் தேதி மலைக்கோவிலில் உச்சி காலத்தில் காப்புக் கட்டுதலுடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் 7ம் தேதி நடைபெறுகிறது.
அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில்நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நெய்வேத்திய நிகழ்ச்சி நடைபெறும். பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து 3.10 மணிக்கு மலைக்கோவிலில் சின்னகுமாரர் அசுரர்களை வதம் செய்ய மலைக்கொழுந்து அம்மனிடம் வேல்வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின் சன்னதி அடைக்கப்படும்.
அன்று மாலை 6 மணிக்கு வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதம், கிழக்கு கிரிவீதியில் பானுகோபசூரன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதம் நடைபெறும். தொடர்ந்து இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நடைபெறும்.
அதனை தொடர்ந்து மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நவ.8-ம் தேதி நடைபெறும். அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தனுசு லக்னத்தில் மலைக்கோவிலில் வள்ளி-தெய்வானை, சண்முக திருக்கல்யாணம் நடைபெறும். இரவு 8.20 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் பெரியநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறும். சூரசம்ஹாரம் காரணமாக நவ.7-ம் தேதி தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.