தமிழ்நாடு

கர்நாடக வனத்துறை தாக்குதல்- தமிழக மீனவர் சுட்டுக்கொலை

Published On 2023-02-17 08:21 GMT   |   Update On 2023-02-17 10:36 GMT
  • துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ராஜா உயிரிழந்த நிலையில் இன்று காலை எல்லையை ஓட்டி உள்ள அடிபாலாறு வழியாக காவிரி ஆற்றில் ராஜா உடல் மிதந்து வந்தது.
  • கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் காவிரி கரையோரம் திரண்டனர் ராஜாவின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு ஓடுகிறது. இந்த பகுதியில் பாலாறு, காவிரி ஆற்றுடன் இணையும் இடமாகும். இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் யானைகளும், மான்களும் அதிக அளவில் உள்ளன.

இங்குள்ள பாலாற்றங்கரையில் கடந்த 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு மீனவர்களான கொளத்தூர் காரைக்காடு பகுதியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜா (வயது 45), செட்டிப்பட்டியை சேர்ந்த ரவி (40), இளையபெருமாள் (40) உள்பட 4 பேர் பரிசல் ஒன்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். மேலும் மான் வேட்டையிலும் ஈடுபட்டதாக தெரிகிறது.

இந்த பகுதி கர்நாடக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வனவிலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள இடமாகும். அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர், அவர்களை சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ராஜா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சுருண்டு விழுந்தார். மற்றவர்கள் ஆற்றில் குதித்து தப்பி விட்டனர். ஆனால் ராஜா மட்டும் வீடு திரும்பவில்லை. ராஜா கதி என்ன? என்பது தெரியமால் இருந்து வந்தது.

போலீசார் மற்றும் வனத்துறையினர் உள்ளூர் பகுதி பொதுமக்கள் உதவியுடன் அடிப்பாலாறு பாலாற்றங்கரை வனப் பகுதியில் ராஜாவை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அவர் ஆற்றில் குதித்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் பாதாள சோதி சங்கிலி, மற்றும் கொக்கிகளை வீசி பாலாற்றில் தேடினர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

துப்பாக்கி சூடு நடந்து 4 நாட்கள் ஆன நிலையில் உறவினர்கள் சோகத்தில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ராஜா உயிரிழந்த நிலையில் இன்று காலை எல்லையை ஓட்டி உள்ள அடியாறு வழியாக காவிரி ஆற்றில் ராஜா உடல் மிதந்து வந்தது. இதை அறிந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் காவிரி கரையோரம் திரண்டனர் ராஜாவின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றில் இறங்கி ராஜாவின் உடலை மீட்டனர். பின்பு பிரேத பரிசோதனைக்காக ராஜாவின் உடல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக-கர்நாடக எல்லையில் இரு மாநில போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்ததால் தமிழக-கர்நாடக எல்லை கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News