தமிழ்நாடு

கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியது ஏன்? கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம்

Published On 2023-10-31 04:06 GMT   |   Update On 2023-10-31 05:09 GMT
  • சிறையில் இருந்து வெளியே வந்த பின் நான் யாரையும் சந்திக்கவில்லை.
  • நீட் தேர்வு இருந்தால் தன் மகனின் மருத்துவ கனவு பறிபோகும் என்பதால் பெட்ரோல் குண்டு வீசினேன்.

சென்னை:

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை வாசல் முன்பு கடந்த 26-ந் தேதி பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ரவுடி கருக்கா வினோத் மதுபோதையில் இந்த செயலை செய்துவிட்டதாக கூறிய போலீசார் 5 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக கவர்னர் மாளிகை சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் மர்ம நபர்கள் கவர்னர் மாளிகையினுள் ஊடுருவ முயன்றனர் என்று தெரிவித்திருந்தனர். இதற்கு பதில் அளித்த போலீசார் கருக்கா வினோத் மட்டும் தான் கவர்னர் மாளிகைக்கு சென்று பெட்ரோல் குண்டுகளை வாசல் அருகே வீசினார் என்று தெரிவித்திருந்தனர்.

கருக்கா வினோத்தை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது எதற்காக பெட்ரோல் குண்டுகளை வீசினாய்? என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர் நீட் தேர்வு மசோதாவில் கவர்னர் கையெழுத்து போட மறுப்பதால் மாணவ-மாணவிகள் பலர் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தான் பெட்ரோல் குண்டு வீசினேன் என கூறி இருந்தான்.

இருப்பினும் கருக்கா வினோத்தின் பின்னணியில் யாரும் இருக்கிறார்களா? என்பது பற்றி போலீசார் முழுமையாக விசாரணை நடத்த திட்டமிட்டனர். இதற்காக கருக்கா வினோத்தை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்து சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது கருக்கா வினோத் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அவர் கோஷம் எழுப்பினார். 3 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து போலீசார் கருக்கா வினோத்தை அழைத்துச்சென்று ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். போலீசில் கருக்கா வினோத் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

பாரதிய ஜனதா அலுவலகத்தில் கடந்த ஆண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிய வழக்கில் சிறையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் வெளியில் வந்தேன். பின்னர் வீட்டுக்கு சென்று ஏன் என்னை வந்து பார்க்கவில்லை என கூறி எனது தாயிடம் கேட்டு தகராறு செய்தேன். இதன் பிறகு நண்பர்களோடு வெளியில் சுற்றினேன். நீட் தேர்வில் மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இது தொடர்பான மசோதாவில் கவர்னர் கையெழுத்து போடாமல் இருப்பது கோபத்தையும் ஏற்படுத்தியது. தனது மகன் தற்போது 6-வது வகுப்பு படித்து வருகிறான். அவனை டாக்டராக ஆசைப்படுகிறேன். ஆனால் நீட் தேர்வு அதற்கு தடையாக இருக்குமோ? என்று அஞ்சினேன். இதுபோன்ற காரணங்களாலேயே கவர்னர் மாளிகை நோக்கி பெட்ரோல் குண்டுகளை வீசினேன்.

சிறையில் இருந்து வெளியில் வந்தபோது 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பினரோடு நானும் வெளியில் வந்தேன். ஆனால் அவர்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இவ்வாறு கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கருக்கா வினோத்தின் போலீஸ் காவல் நாளையுடன் முடிகிறது. இன்று 2-வது நாளாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாளை பிற்பகலில் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ள கருக்கா வினோத் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

Tags:    

Similar News