தமிழ்நாடு

நெல்லை மாநகராட்சி புதிய மேயராக கிட்டு தேர்வு

Published On 2024-08-05 09:01 GMT   |   Update On 2024-08-05 09:01 GMT
  • தி.மு.க மேயர் வேட்பாளர் ராம கிருஷ்ணன் சைக்கிளில் தனது ஆதரவு கவுன்சிலர்கள் புடை சூழ வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வந்தார்.
  • வேட்பாளர் பவுல்ராஜிக்கு ஆதரவாக 4-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் வசந்தா முன்மொழிந்தார்.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி மொத்தம் 55 வார்டுகளை கொண்டது. இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் 44 பேரும், அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் 7 பேரும் என மொத்தம் 51 கவுன்சிலர்கள் தி.மு.க.வுக்கு உள்ளனர். அ.தி.மு.க கவுன்சிலர்கள் 4 பேர் உள்ளனர்.

நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து புதிய மேயரை தேர்ந்தெடுக்க இன்று (திங்கட்கிழமை), மறைமுக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. புதிய மேயர் வேட்பாளராக தி.மு.க சார்பில் மாநகராட்சி 25-வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சுகபுத்ரா தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

மேலும் வளாகத்தில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் கீதா தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இன்று காலை கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடைபெறும் ராஜாஜி மைய கூட்ட அரங்குக்கு வர தொடங்கினர். முன்னதாக தி.மு.க மேயர் வேட்பாளர் ராம கிருஷ்ணன் சைக்கிளில் தனது ஆதரவு கவுன்சிலர்கள் புடை சூழ வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வந்தார்.

பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரான கமிஷனர் சுகபுத்ரா முன்னிலையில் வேட்பு மனு வழங்கப்பட்டது. அப்போது கவுன்சிலர் ராமகிருஷ்ணன் வேட்பு மனுவை பெற்றுக் கொண்டு தேர்தல் நடக்கும் அரங்குக்கு சென்றார்.

அப்போது தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட 6-வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ் அதிகாரிகளிடம் வேட்பு மனுவை வாங்கிக் கொண்டு தேர்தல் நடக்கும் அரங்கிற்கு சென்றார்.

தொடர்ந்து 2 பேரும் வேட்பு மனுவை நிரப்பி அதிகாரியிடம் வழங்கினர். அப்போது தி.மு.க. வேட்பாளர் கிட்டுவுக்கு ஆதரவாக கவுன்சிலர் சுதாமூர்த்தி, முன்மொழிந்தார். கோகுல வாணி வழிமொழிந்தார்.

இதே போல் வேட்பாளர் பவுல்ராஜிக்கு ஆதரவாக 4-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் வசந்தா முன்மொழிந்தார். ம.தி.மு.க. கவுன்சிலரான சங்கீதா வழிமொழிந்தார். தொடர்ந்து வேட்பு மனுவை அதிகாரிகள் பரிசீலனை செய்த பின்னர் 2 பேரின் மனுக்களையும் ஏற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் தொடங்கியது.

இந்நிலையில் நெல்லை மாநகராட்சி மேயருக்கான மறைமுக தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கிட்டு வெற்றி பெற்றார். மேயர் தேர்தலில் திமுக சார்பில் பேட்டியிட்ட கிட்டு 30 வாக்குகள் பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திமுகவை சேர்ந்த கிட்டு என்ற ராமகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.

Tags:    

Similar News