இறந்த கனகராஜின் செல்போன் ஆதாரங்களை திரட்ட அவகாசம்: கொடநாடு வழக்கு நவம்பர் 24-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
- கொடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார்.
- குற்றம்சாட்டப்பட்ட வாளையார் மனோஜ் இன்று கோர்ட்டில் ஆஜரானார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது.
இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார்.
தற்போது இந்த வழக்கை கோவை ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 8-ந்தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.சி.ஐ.டி போலீசார் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
குற்றம்சாட்டப்பட்ட வாளையார் மனோஜ் இன்று கோர்ட்டில் ஆஜரானார்.
சி.பி.சி.ஐ.டி. தரப்பில் வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் வாதாடினர். அப்போது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜின் தொலைபேசி, செல்போன் டவர் போன்றவற்றை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு போதுமான கால அவகாசம் வேண்டும் என கேட்டு வாதாடினர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அப்துல்காதர் வழக்கை நவம்பர் 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.