தமிழ்நாடு

கடந்த 100 நாட்களில் கொடைக்கானலில் இ-பாஸ் பெற்று 6.59 லட்சம் பேர் வருகை

Published On 2024-08-17 05:38 GMT   |   Update On 2024-08-17 05:38 GMT
  • கொரோனா காலத்தில் இருந்ததுபோல் இல்லாமல் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது.
  • கொடைக்கானலில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் விடுதிகளிலேயே முடங்கும் நிலை உள்ளது.

கொடைக்கானல்:

தமிழகத்தின் புகழ்பெற்ற கோடை வாசஸ்தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தடுக்கவும், கடந்த மே மாதம் முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள், இ-பாஸ் பெறுவதற்கான இணைய முகவரியும் வெளியிடப்பட்டது. கொடைக்கானலில் வாரந்தோறும் சராசரியாக சுற்றுலா பயணிகள் வருகை தந்தாலும் வார இறுதி நாட்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

இவர்களுக்கு இ-பாஸ் பெறுவதில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாத வகையில் நுழைவு வாயில் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சியில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் செல்போன் மூலமே இ-பாஸ் பதிவிறக்கம் செய்து அனுமதிக்கப்பட்டனர்.

ஆரம்பத்தில் இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வருவதாக உள்ளூர் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இதனிடையே இ-பாஸ் நடைமுறையை செப்டம்பர் 30ந் தேதி வரை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்ட மே 7ந் தேதி முதல் அக்டோபர் 15 வரை 2 லட்சத்து 55 ஆயிரத்து 62 வாகனங்களில் 14 லட்சத்து 98 ஆயிரத்து 206 பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் இருந்ததுபோல் இல்லாமல் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது. மே 7ந் தேதி முதல் ஆகஸ்ட் 15ந் தேதி வரை 100 நாட்களில் 1 லட்சத்து 1523 வாகனங்களில் 6 லட்சத்து 59 ஆயிரத்து 818 பயணிகள் வந்துள்ளனர். கொடைக்கானலில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் விடுதிகளிலேயே முடங்கும் நிலை உள்ளது.

நேற்று மட்டும் 6096 வாகனங்களில் 31,689 பயணிகள் கொடைக்கானல் செல்ல அனுமதி பெற்றிருந்த நிலையில் 98 வாகனங்களில் 705 பேர் மட்டுமே வருகை தந்தனர். வழக்கமாக சுதந்திரதினத்தை தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகரித்து காணப்படும் நிலையில் தற்போது குறைந்த அளவே உள்ளனர்.

Tags:    

Similar News