தமிழ்நாடு

கள்ளச்சாராய விவகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்- எல்.முருகன்

Published On 2024-06-22 06:02 GMT   |   Update On 2024-06-22 06:02 GMT
  • மக்களின் உயிர் மீது முதல்வருக்கு அக்கறை இல்லை.
  • தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை முற்றிலுமாக பரவி இருக்கிறது.

ஊட்டி:

மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி எல்.முருகன் நீலகிரி மாவட்டத்திற்கு வந்தார்.

அவருக்கு பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேடு காரணமாக இன்றைக்கு கள்ளக்குறிச்சியில் 50க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை பலி கொடுத்திருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்து 2 நாட்களை கடந்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் மக்களை வந்து பார்க்கவில்லை. மக்களின் உயிர் மீது முதல்வருக்கு அக்கறை இல்லை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளச்சாராய விவகாரத்தில் நேரடியாக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும்.

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத செயலிழந்த அரசாக, இந்த தி.மு.க அரசாங்கம் இருந்து கொண்டிருக்கிறது.

கள்ளச்சாராயம் விற்பனை செய்த குற்றவாளிகளின் வீடுகளில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களின் படங்கள் தான் இடம்பெற்றுள்ளது. இதனால் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை முற்றிலுமாக பரவி இருக்கிறது. தி.மு.க அரசு மக்களை போதைப் பொருட்களால் அழித்துக் கொண்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஜனநாயக முறைப்படி சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும்போதும், அதற்கு பதிலளிக்க தி.மு.க.வினர் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். வருகிற உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கையாக இருக்க வேண்டும். அதற்காக தற்போது இருந்தே வேலைகளை தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News