தமிழ்நாடு (Tamil Nadu)

மாடுகள் வளர்ப்பு தடை சட்டம் வேண்டும் - தமிழக அரசுக்கு மாநகராட்சி கடிதம்

Published On 2024-06-21 09:15 GMT   |   Update On 2024-06-21 09:29 GMT
  • கடந்த ஆண்டு, திருவல்லிக்கேணி பகுதியில் முதியவர் ஒருவர் மாடு முட்டியதில் உயிரிழந்தார்.
  • சாலையில் திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளருக்கு அபராதம் விதித்தாலும் அவர்கள் மாடுகளை பராமரிப்பது இல்லை.

சென்னை:

திருவொற்றியூரை சேர்ந்த மதுமதி என்பவர் சில தினங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற போது எருமை மாடு அவரை முட்டி சுமார் 50 அடி தூரத்திற்கு இழுத்து சென்றது. அவரை காப்பாற்ற வந்தவரையும் மாடு முட்டி தள்ளியது. இந்த சம்பவத்தில், இருவருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

கடந்த ஆண்டு, திருவல்லிக்கேணி பகுதியில் முதியவர் ஒருவர் மாடு முட்டியதில் உயிரிழந்தார். அரும்பாக்கத்தில் பள்ளி முடிந்து தாயுடன் வீட்டிற்கு வந்த சிறுமியையும் மாடு முட்டியது.

ஆவடியில் வீட்டு வாசலில் நின்று குழந்தைக்கு உணவு ஊட்டிய பெண்ணை மாடு முட்டியது. திருவல்லிக்கேணி டி.பி.தெருவில் கஸ்தூரி ரங்கன் என்பவரும் மாடு முட்டி காயமடைந்தார். குன்றத்தூர் அருகே நேற்று சாலையின் குறுக்கே மாடு வந்ததால் மோட்டார் சைக்கிள் மோதி கீழே விழுந்த பூந்தமல்லியை சேர்ந்த மோகன் என்பவர் உயிரிழந்தார்.

மாடு முட்டி பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகம் நடந்து வருகின்றன. மாடுகளை பிடித்து அபராதம் விதித்தாலும், அதன் உரிமையாளர்கள் மீண்டும் வழக்கம் போல் மாடுகளை சாலையில் திரியவிடுகிறார்கள்.

இந்த நிலையில் சென்னையில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் மாடுகள் திரிவதற்கும், வளர்க்கவும் தடை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி கடிதம் எழுதியுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சியில் மாடுகளை வளர்க்க, 2013-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. பின்னர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, அதற்கு தடை பெறப்பட்டு உள்ளது. தற்போது, மாடுகளால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் மாடுகளை வளர்ப்பதற்கான கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சாலையில் திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளருக்கு அபராதம் விதித்தாலும் அவர்கள் மாடுகளை பராமரிப்பது இல்லை. எனவே, மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மாடுகளை வளர்க்கவோ, சாலையில் விடவோ தடை விதிக்க, அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

அதன்படி சந்தை பகுதிகள், கோவில்கள், பள்ளிகள், கல்லூரி வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் திரிவதற்கு தடை விதிக்கப்படும். அதையும் மீறி திரியும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாடுகள் வளர்ப்போர் தங்களுக்கு சொந்தமான இடங்களில் கட்டாயம் குறிப்பிட்ட அளவு காலியிடம் வைத்திருப்பது அவசியம். அவ்வாறு இடம் வைத்துள்ள உரிமையாளர்கள் மட்டுமே மாடுகள் வளர்க்க அனுமதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News