மலைப்பாதையில் இரவு நேரங்களில் சாலையில் உலா வரும் சிறுத்தை- வனத்துறையினர் எச்சரிக்கை
- மலைப்பகுதியில் இரவு நேரங்களில் சாலையோரம் யானைகள் நடமாட்டம், புலி, சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
- வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை நிலவுவதால் உணவு, குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமப் பகுதிக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன.
இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு 19-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையில் நடுவில் ஒரு சிறுத்தை உலா வந்தது.
அதை அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்தார். சிறிது நேரம் சாலை நடுவில் உலா வந்த சிறுத்தை பின்னர் தடுப்பு சுவரில் ஏரி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
இதைப் பார்த்த மற்ற வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, சமீப காலமாக திம்பம் மலைப்பகுதியில் இரவு நேரங்களில் சாலையோரம் யானைகள் நடமாட்டம், புலி, சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை நிலவுவதால் உணவு, குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமப் பகுதிக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது.
இதனால் இந்த பகுதியில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். தேவையின்றி இரவு நேரங்களில் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி கீழே இறங்க வேண்டாம்.
சிலர் இயற்கை உபாதைகளை கழிக்க வாகனங்களில் இருந்து கீழே இறங்குவார்கள், அவ்வாறு செய்ய வேண்டாம். அதைப்போல் வன விலங்குகளின் நடமாட்டத்தை தங்களது செல்போன்களில் படம் பிடிக்கக் கூடாது. இவற்றை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.