நெல்லை காங்கிரஸ் தலைவர் குடும்பத்தினர்- உறவினர்களிடம் 'கிடுக்கிப்பிடி' விசாரணை
- எலும்பு மாதிரிகள் எடுக்கப்பட்டு மதுரைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- கடிதத்தில் இருந்த அரசியல் பிரமுகர்களிடமும் விசாரணை நடத்தினர்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் மர்மச்சாவு வழக்கில் 1 வாரமாகியும் இதுவரை துப்பு துலங்கவில்லை.
அவரது உடல் இரும்பு கம்பியால் கட்டப்பட்டு எரிக்கப்பட்டிருந்ததும், விசாரணையின் அடிப்படையிலும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு அதிக அளவில் இருப்பதாக போலீசார் கருதுகின்றனர்.
ஆனாலும் கொலையாளிகள் யார்? என்பது மர்மமாக உள்ளது. அவரது உடலில் இருந்து எலும்பு மாதிரிகள் எடுக்கப்பட்டு மதுரைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவர் எழுதியதாக கிடைத்த கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்த தொழில் அதிபர்களிடம் தொழில் ரீதியில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்கிறதா? என்று விசாரணை நடத்தினர். கடிதத்தில் இருந்த அரசியல் பிரமுகர்களிடமும் விசாரணை நடத்தினர். ஆனால் எவ்வித முடிவும் கிடைக்கவில்லை.
தடயவியல் நிபுணர்கள் அறிக்கையின்படி அவரது குரல்வளை பகுதியில் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் ஸ்கிராப்பர் துகள்கள் இருப்பதாக தகவல் வெளியாகியது. இதனால் அவரது வீட்டில் கைரேகை மற்றும் தடய அறிவியல் துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது அவரது வீட்டு மாட்டு தொழுவத்தில்அந்த ஸ்கிராப்பருக்கான கவர் கிடந்தது. அவர் மாயமான 2-ந்தேதி பஜாரில் வாங்கி வந்த டார்ச்லைட் அவரது வீட்டிற்குள்ளேயே கைப்பற்றப்பட்டது. இதற்கிடையே நேற்று கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றி நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு துருப்பிடித்த கத்தி அதில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
கரைசுத்துபுதூரில் அவர் வீடு தெரு முனையில் அமைந்துள்ளது. அதன்பின்னர் அமைந்திருக்கும் அனைத்து வீடுகளிலும் எந்த திருட்டு சம்பவங்கள் நடந்தாலும் ஜெயக்குமார் வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலமாக தான் போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிப்பார்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜெயக்குமார் வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்தில் கொலை செய்யப்பட்ட நாளன்று அவர் வீட்டை சுற்றிலும் இருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் எதுவும் வேலை செய்யவில்லை என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் சில ஆதாரங்களும் அவரது வீடு, தோட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கிடைத்ததால் அவருக்கு நன்கு தெரிந்த நபர்கள் தான் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் அவரது குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் முழுமையான ஒரு முடிவுக்கு வர முடியாமல் போலீசார் திணறி வருவதால் நாளைக்குள் வழக்கை முடித்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
அவ்வாறு இல்லையெனில் இந்த வழக்கை விரைவில் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றுவதற்கு உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.