மயிலாடுதுறை தொடர்ந்து அரியலூரில் சிறுத்தை நடமாட்டம்- மருத்துவமனைக்குள் புகுந்ததால் பரபரப்பு
- செந்துரை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை செல்லும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
- பல்வேறு இடங்களில் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்களம் பகுதியில் கடந்த 2-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்த வனத்துறை, தீயணைப்பு துறை, காவல் துறையினர் சிறுத்தையை தேடும் பணியை தொடங்கினர்.
இன்றுடன் 10 நாட்களாக அப்பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
சிறுத்தையின் நடமாட்டம் பெரும்பாலும் ஆறு மற்றும் ஓடைகள் வழியாகவே இருக்கிறது.
நேற்று முன்தினம் காலை காஞ்சிவாய் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் சிறுத்தை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதனால் சிறுத்தை மயிலாடுதுறை நகரை விட்டு வெளியேறி விட்டதோ? என்ற சந்தேகமும் எழுந்தது.
இந்நிலையில் மயிலாடுதுறையை தொடர்ந்து, அரியலூரிலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
செந்துரை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை செல்லும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில்பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, பல்வேறு இடங்களில் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.