தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கராத்தே, ஜூடோ பயிற்சி- மேயர் தொடங்கி வைத்தார்

Published On 2024-09-11 09:26 GMT   |   Update On 2024-09-11 09:26 GMT
  • இந்த கல்வியாண்டில் 6 மாதம் பயிற்சி அளிக்கவும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கவும் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பெரம்பூர் குக்ஸ் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இந்த பயிற்சியை இன்று மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார்.

சென்னை:

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உடற்கல்வியை மேம்படுத்தும் வகையில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு குத்துச்சண்டை, கராத்தே, ஜூடோ, தேக்வாண்டோ, கேரம், அத்லடிக் போன்ற பயிற்சி அளிக்க மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இந்த கல்வியாண்டில் 6 மாதம் பயிற்சி அளிக்கவும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கவும் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 6 மாநகராட்சி பள்ளிகளில் முதல் கட்டமாக இன்று கராத்தே, ஜூடோ, குத்து சண்டை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் தொடங்கப்பட்டன.

பெரம்பூர் குக்ஸ் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இந்த பயிற்சியை இன்று மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார். 6 முதல் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை தேர்ந்து எடுத்து வாரத்தில் 2 நாட்கள் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பயிற்சி எடுத்துக்கொண்ட மாணவர்கள் இடையே போட்டிகள் நடத்தப்பட்டு மண்டல, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் கராத்தே போட்டிகளில் இவர்களை பங்கெடுக்க செய்து, வெற்றி பெற வைப்பதுதான் இலக்காகும் என்று மேயர் பிரியா தெரிவித்தார்.

பெரம்பூர், ராயபுரம், தண்டையார் பேட்டை, சைதாப்பேட்டை, வேளச்சேரி, திருவொற்றியூர் தொகுதியில் தலா ஒரு பள்ளி வீதம் கராத்தே பயிற்சி கொடுக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News