- காவிரி கரையோர மாவட்டங்கள் வெள்ளக்காடானது.
- அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம்:
காவிரிநீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியது. இதனால் உபரிநீர் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த மாதம் 30-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.
தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்ததால் அது அப்படியே உபரிநீராக 16 கண் பாலம் வழியாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இதன் காரணமாக காவிரி கரையோர மாவட்டங்கள் வெள்ளக்காடானது.
இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்தும் குறைந்தது. இதன் காரணமாக உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
பின்னர் மீண்டும் கடந்த வாரம் நீர்வரத்து அதிகரித்தது. அதிகபட்சமாக வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தால் அணை இந்தாண்டில் 2-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து மீண்டும் உபரிநீர் 16 கண் பாலம் வழியாக வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து வழக்கம் போல் நீர்வரத்து குறைந்ததால் உபரிநீரும் நிறுத்தப்பட்டது. அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து விட்டதால் அணைக்கு நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 8 ஆயிரத்து 563 கனஅடியாக குறைந்தது. ஆனால் தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் அணையின் நீர்மட்டம் 119.76 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருவதால் நீர்மட்டம் குறைய தொடங்கியது.