கிருஷ்ணகிரி அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்து- 22 பேர் காயம்
- மினிபஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே வந்தபோது வண்டியை டிரைவர் தாறுமாறாக ஓட்டி வந்துள்ளார்.
- கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமாணிக்கம் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே பர்கூரில் மினி பஸ் ஒன்று சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் டிரைவர் மற்றும் சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 22 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் தகவலறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சென்னை அம்பத்தூரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். அதற்காக அவர்கள் வாடகைக்கு ஒரு மினி பஸ்சை பேசி நேற்று இரவு புறப்படனர்.
இந்த மினி பஸ்சில் பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த கலிமுல்லா என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் மினிபஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே வந்தபோது வண்டியை டிரைவர் தாறுமாறாக ஓட்டி வந்துள்ளார்.
இதனை அறிந்த பஸ்சில் இருந்தவர்கள் டிரைவரை பஸ்சில் இருந்து இறக்கி டீ வாங்கி கொடுத்து தூங்கச் சொல்லி உள்ளனர். அதற்கு டிரைவர் தானே வண்டியை ஓட்டி செல்வதாக கூறி வண்டியை மீண்டும் ஓட்டியதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து மினிபஸ் கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பர்கூர் அரசு என்ஜினியரிங் கல்லூரி முன்பு வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வண்டி சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த டிரைவர் கலிமுல்லா உட்பட 22 பேரும் காயமடைந்தனர்.
அப்போது வண்டியில் இருந்தவர் கதறினர். உடனே சாலையோரம் இருந்த பொதுமக்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனே ஓடிவந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் உடனே கந்திகுப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்தவர்களையும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நிலையில் 17 பேர் சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமாணிக்கம் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாலை ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாவுக்கு வந்த மினி பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பர்கூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.