தமிழ்நாடு

பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுமா?- அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்

Published On 2023-07-21 03:15 GMT   |   Update On 2023-07-21 03:15 GMT
  • ஆவினின் பால் கொள்முதல் 4 லட்சம் லிட்டர் அதிகரித்து இருக்கிறது.
  • தினமும் ஒரு லட்சம் லிட்டர் கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படும் தகவல் தவறானது.

சென்னை:

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் பால் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் அதிகாரிகளின் மாத ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மத்தியில் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆவினின் பால் கொள்முதல் 4 லட்சம் லிட்டர் அதிகரித்து இருக்கிறது. விற்பனையை பொறுத்தவரையில் சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் கூடியுள்ளது. இதேபோல், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விற்பனை அதிகரித்து இருக்கிறது. இதுபோல நிர்வாகத்திலும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது.

முதல் முறையாக மின்சார செலவை குறைப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதன் மூலம் கடந்த மாதம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 500 யூனிட்டையும், பணத்தின் மதிப்பில் ரூ.25 லட்சத்தையும் ஆவினுக்கு மிச்சப்படுத்தி இருக்கிறோம். பால் கொள்முதலுக்கான பணத்தை தாமதமாக கொடுத்து வருவதாக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை இருந்து வந்தது. இப்போது வாரம் ஒரு முறை பணம் அவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர்களின் பால் தரத்தை பார்த்து, அதே இடத்தில் விலையை நிர்ணயம் செய்யும் முறை 60 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விட்டது. மீதமுள்ள 40 சதவீதத்தை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2 லட்சம் கறவை மாடுகளை விவசாயிகளுக்கு கடன் மற்றும் மானியத்தை வங்கிகள் மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

தினமும் ஒரு லட்சம் லிட்டர் கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படும் தகவல் தவறானது. தமிழ்நாட்டிலேயே பாலின் தேவை அதிகமாக உள்ளது. நமக்கு தேவையான பாலை குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்குவதுதான் நம்முடைய நோக்கம். நம்முடைய தேவைக்கு மிகுதியாக பால் கொள்முதல் செய்யப்படும் பட்சத்தில் வெளி மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்யப்படும்.

அதேபோல், பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையையும் நிறுத்த சொல்லியிருப்பதாக வெளியாகும் தகவலும் உண்மை இல்லை. அந்த பாலை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். அதுதொடர்பாக ஆய்வு செய்யத்தான் சொல்லியிருக்கிறோமே தவிர, பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்தவில்லை.

பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆவின் பால் பாக்கெட் மிகவும் குறைவான விலையில்தான் விற்கிறோம். மற்ற பால் நிறுவனங்களைவிட ரூ.10 முதல் ரூ.15 வரை குறைவாகவே விற்பனை செய்து வருகிறோம். விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சருடன் நிச்சயம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆவின் தயாரிப்பு பொருட்களின் தரம், சுவையை அதிகரித்து உள்ளோம். வெண்ணெய், நெய் ஆகியவற்றில் தட்டுப்பாடு இருக்கிறது. வெளி இடங்களில் வாங்கி விற்பனை செய்வதை குறைத்து, உள்ளூரிலேயே வாங்கி விற்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News