தமிழ்நாடு

அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்: அமைச்சர் மெய்யநாதன்

Published On 2023-11-16 07:19 GMT   |   Update On 2023-11-16 07:19 GMT
  • மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
  • மாவட்டத்தில் 68,000 ஹெக்டேர் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் 52,000 ஹெக்டேர் மட்டுமே பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

சீர்காழி:

கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரப்பள்ளம் கிராமத்தில் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்ட விளைநிலங்களை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தண்ணீரில் மூழ்கியிருக்கும் பயிர்களை அமைச்சரிடம் காண்பித்த விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள உப்பனாற்றை முழுவதுமாக தூர்வாரி சீரமைக்க வேண்டும் எனவும் கதவணைகளை புதுப்பித்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதன் பின்னர் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் ஹெக்டேர் சம்பா சாகுபடி தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது, 39 கால்நடைகள் உயிரிழந்துள்ளது 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய கணக்கெடுப்பு செய்து வருகின்றனர்.

மேலும் கனமழை காரணமாக எவ்வித பாதிப்பு ஏற்பட்டாலும் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதிப்புகள் குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும் விவசாயிகளின் கோரிக்கையான உப்பனாறை தூர்வாரவும் இப்பகுதியில் பழுதடைந்துள்ள 6 கதவணைகளை விரைந்து சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாவட்டத்தில் 68,000 ஹெக்டேர் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் 52,000 ஹெக்டேர் மட்டுமே பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது பயிர் காப்பீடு செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள அனைத்து விவசாயிகளும் உடனே பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News