முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டி: அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்
- போட்டி தொடங்குவதற்கு முன்பு மாடுபிடி வீரர்கள் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
- சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.
மதுரை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் எம்.சத்திரப்பட்டியில் இன்று மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இதற்காக அங்குள்ள திடலில் வாடிவாசல் ஏற்படுத்தப்பட்டு 10 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வகையில் பிரமாண்ட கேலரிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
இன்று காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதனை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். முன்னதாக போட்டி தொடங்குவதற்கு முன்பு மாடுபிடி வீரர்கள் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் அமைச்சர்கள் மூர்த்தி, ஐ.பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், மெய்யநாதன், ராஜ கண்ணப்பன், சிவசங்கரன், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங், எம்.எல்.ஏ.க் கள் தளபதி, சோழவந்தான் வெங்கடேசன், புதூர் பூமிநாதன் மற்றும் கூடுதல் கலெக்டர் சரவணன், தி.மு.க. நிர்வாகி கள் சோமசுந்தர பாண்டியன், ஜி.பி.ராஜா, மருது பாண்டி, வக்கீல் கலாநிதி, வீரராகவன், வைகை மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியவுடன் வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்கள் பிடியில் சிக்காமல் போக்கு காட்டி யது. வீரர்களும் அதற்கு இணையாக காளைகளை அடக்கினர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இதேபோல் 776 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். 10 சுற்றுகளாக நடைபெறும் ஜல்லிக்கட்டில் ஒவ்வொரு சுற்றிலும் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் இறுதி சுற்றுவரை பங்கேற்று வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கும், காளை உரிமையாளருக்கும் முதல் பரிசாக கார்கள் வழங்கப்படுகிறது. இதேபோல் இருபிரிவிலும் 2-ம் பரிசாக 2 புல்லட் பைக்குகளும், 3-ம் பரிசாக 2 ஹீரோ பைக்குகளும் வழங்கப்படுகிறது.
அதேபோல போட்டியில் பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் ஒரு கிராம் தங்க காசு வழங்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்க பரிசும், வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, சைக்கிள் உள்ளிட்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். போட்டியில் காயம் அடையும் வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவ குழுவும், ஆம்புலன்சு வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.