பாரதிய ஜனதா கட்சி அ.தி.மு.கவை பிளவுபடுத்தி குளிர்காய முயற்சிக்கிறது- அமைச்சர் சக்கரபாணி
- முதலமைச்சர் அறிவித்தபடி தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றி உள்ளார்.
- ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் பா.ஜ.க.வால் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட கருங்கல்பாளையம் கே.எஸ்.நகர். பகுதியில் அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் சேகர்பாபு ஆகியோர் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர். அவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முதலமைச்சர் அறிவித்தபடி தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றி உள்ளார். இது மக்களுக்கான பொற்கால ஆட்சியாக திகழ்கிறது. இதனால் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.
வேட்பாளரை அறிவித்து தனித்து நிற்க முடியாமல் திணறும் பாரதிய ஜனதா கட்சி, தமிழகத்தில் காலூன்ற முடியாததால் அ.தி.மு.க.வை பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கிறது.
ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் பா.ஜ.க.வால் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை. எத்தனை அண்ணாமலை அ.தி.மு.க.வுடன் கூட்டணியாக வந்தாலும் இந்த தொகுதியில் வெற்றி பெற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.