கொல்லிமலையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைச்சர் சுப்பிரமணியன் திடீர் ஆய்வு
- ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் வருகை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அங்கிருந்த டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
- நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று நாமக்கல் மாவட்டத்திற்கு வந்தார்.
அவர் திருச்செங்கோட்டில் அரசு ஆஸ்பத்திரி சிடி ஸ்கேன், சீதாராம் பாளையம் நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம் உட்பட பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
இன்று காலை கொல்லிமலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார். இதையொட்டி கொல்லிமலை சென்று, இன்று காலை அங்கு நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது, கொல்லி மலை வட்டம், சோளக்காடு-புதுவளவு நலவாழ்வு மையம் மற்றும் இலக்கியம்பட்டி நலவாழ்வு மையத்தில் அமைச்சர் சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் வருகை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அங்கிருந்த டாக்டர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் இருப்பு குறித்தும் ஆய்வு செய்த அவர், நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அமைச்சர் திடீரென ஆய்வுக்கு வந்த சம்பவம், ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.