அரியானா வன்முறைக்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: தமிழக முதலமைச்சர் வலியுறுத்தல்
- வெறுப்பும், பிரிவினையும் நம்மை அழிக்க அனுமதிக்க முடியாது.
- எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதை அரியானா அரசு உறுதி செய்யவேண்டும்.
சென்னை:
அரியானாவில் நடந்த வன்முறைக்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
அரியானாவில் சமீபத்தில் நடந்த வகுப்புவாத வன்முறையில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிக்கிறேன். உண்மையான பலம் என்பது அமைதி, அகிம்சை மற்றும் இணக்கமாக வாழ்வதில் உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வெறுப்பும், பிரிவினையும் நம்மை அழிக்க அனுமதிக்க முடியாது.
கலவரக்காரர்களுக்கு எதிராக எந்தவித பாரபட்சமும் இன்றி அரியானா அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், அங்கு விரைவில் இயல்பு நிலையை மீட்டெடுக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதை அரியானா அரசு உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியிருக்கிறார்.