தமிழ்நாடு

நிதி நிறுவனம் நடத்தி பணம் மோசடி: சென்னை, கோவை உள்பட 11 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை

Published On 2022-08-27 10:19 GMT   |   Update On 2022-08-27 10:19 GMT
  • தேயிலை தோட்டங்களில் பயன்படுத்தப்படும் எந்திரங்களை குத்தகைக்கு எடுத்து பொதுமக்களுக்கு உணவுப்பொருட்களை விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.
  • கைதான தம்பதியை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

கோவை:

நீலகிரி மாவட்டம் அப்பர் கூடலூர் கே.கே. நகரைச் சேர்ந்தவர் துரைராஜ் (வயது 41). இவரது மனைவி சாரதா (35).

இவர்கள் 2 பேரும் சேர்ந்து ஆகாஷ் ஸ்ருதி ஸ்பைஸ் இந்தியா மற்றும் ஸ்பைஸ் இந்தியா என 2 நிதி நிறுவனங்களை நடத்தி வந்தனர்.

தங்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 8 முதல் 12 சதவீதம் வரை வட்டி தருவதாக தெரிவித்தனர். தேயிலை தோட்டங்களில் பயன்படுத்தப்படும் எந்திரங்களை குத்தகைக்கு எடுத்து பொதுமக்களுக்கு உணவுப்பொருட்களை விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.

ஒரு முதலீட்டாளர் ரூ.1 லட்சம் செலுத்தினால் நிறுவனம் 24 மாதங்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரம் திரும்ப கொடுக்கும் என்றும், 2 ஆண்டுகளுக்கு பிறகு முதலீடு செய்த தொகையில் 50 சதவீதம் முதலீட்டாளர்களுக்கு திருப்பித்தரப்படும் என்றும் அறிவித்தனர்.

இதை நம்பி அந்த நிதி நிறுவனங்களில் ஏராளமானோர் முதலீடு செய்தனர். சிறிது காலம் ஊக்கத்தொகை என்ற பெயரில் அந்த நிறுவனம் வட்டி வழங்கியது. திடீரென வட்டி வழங்குவதை நிறுத்திவிட்டு நிறுவனத்தை நடத்திய துரைராஜ், சாரதா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.

இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாத்தல் மற்றும் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைராஜ், சாரதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

விசாரணையில் அவர்கள் சென்னை, கோவை, ஊட்டி, சேலம், பெங்களூரு, சேலம், கேரளா, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் அந்த நிறுவனத்தின் கிளைகள் மூலம் 66 முதலீட்டாளர்களிடம் ரூ.1 கோடியே 85 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து துரைராஜ், சாரதா ஆகியோர் நடத்தி வந்த நிதி நிறுவன கிளைகள் மற்றும் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி இன்று துரைராஜ், சாரதா ஆகியோருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என 11 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கோவையில் சிங்காநல்லூர், துடியலூர் உள்பட 4 இடங்களிலும், நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, அப்பர் கூடலூர் உள்ளிட்ட 4 இடங்களிலும், சேலத்தில் ஒரு இடத்திலும், சென்னையில் 2 இடங்களிலும் பொரு ளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

துரைராஜூம், அவரது மனைவியும் முதலீட்டாளர்களிடம் பெற்ற நிதியை எந்த வகையில் செலவிட்டனர், சொத்துக்கள் எதுவும் வாங்கி குவித்துள்ளார்கள், வேறு எங்காவது முதலீடு செய்துள்ளார்களா என்பதை கண்டறிவதற்காக இந்த சோதனை நடந்தது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் இன்றைய சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் கைதான தம்பதியை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News