கொலை மிரட்டல் வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
- அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- திருச்சி மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீசார் வேனில் கரூருக்கு அழைத்து வந்தனர்.
கரூர்:
ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே அந்த நிலத்தின் உரிமையாளர் பிரகாஷ் கொடுத்த புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர், பிரவீன் உள்ளிட்டோர் மீது வாங்கல் போலீசார் கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலை மிரட்டல் வழக்கு தொடர்பாக திருச்சி சிறையில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். நேற்று திருச்சி மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீசார் வேனில் கரூருக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2-ல் நீதிபதி (பொறுப்பு) மகேஷ் முன்பு நேற்று காலை 11.50 மணி அளவில் அவரை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 31-ம் தேதி வரை எம்.ஆர்.விஜயபாஸ்கரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து மதியம் 1.15 மணியளவில் கரூர் கோர்ட்டில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.
எம்.ஆர்.விஜயபாஸ்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தும் தகவல் தெரிந்தவுடன் ஏராளமான அதிமுகவினர் அங்கு திரண்டனர். இதனையொட்டி கரூர் கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.