கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன்- மு.க.ஸ்டாலின் இரங்கல்
- கழகத்தின் போர்வாளான முரசொலி நாளேட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்று தன் எழுத்துகளால் ஜனநாயகக் குரலாக ஒலித்தவர்.
- என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கழகத்திலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்.
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வியின் கணவரான முரசொலி செல்வம் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இன்று மரணம் அடைந்தார்.
82 வயதான அவர் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் 50 ஆண்டுகளாக நிர்வாக ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படும் முரசொலி செல்வத்தின் உடல் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
முரசொலி செல்வத்தின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தில் கூறியிருப்பதாவது:-
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் அன்பு மருமகனும், அவரது மனசாட்சியான முரசொலி மாறனின் இளவலும், தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக் குருதியை வடியச் செய்கிறது.
கழகத்தின் போர்வாளான முரசொலி நாளேட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்று தன் எழுத்துகளால் ஜனநாயகக் குரலாக ஒலித்தவர்.
தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன்.
என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கழகத்திலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்.
செல்வமே.. முரசொலி செல்வமே.. பண்பின் திருவுருவமே... திராவிட இயக்கத்தின் படைக்கலனே... கழகத்தின் கொள்கைச் செல்வமே.. நெஞ்சிலும் நினைவிலும் என்றும் நிலைத்திருப்பீர் என்று தெரிவித்துள்ளார்.