மர்மவிலங்கு நடமாட்டம்: சமூக வலைதளங்களில் பரவிவரும் சிறுத்தை புகைப்படங்களால் மக்கள் அச்சம்
- இரவு நேரங்களில் எக்காரணம் கொண்டும் வெளியில் வரவேண்டாம் என ஒலிபெருக்கி வைத்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
- சென்னசமுத்திரம் கிளை வாய்க்கால் கரையில் சிறுத்தையின் உருமல் சத்தத்தை தச்சங்காட்டு வலசை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் கேட்டுள்ளார்.
அறச்சலூர்:
ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த அட்டவணை அனுமன்பள்ளி ஊராட்சியில் ஓம்சக்தி நகர் உள்ளது. அறச்சலூர் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள இந்த நகரில் சண்முகசுந்தரம் என்ற விவசாயிக்கு சொந்தமான 7 மாத கன்றுக்குட்டியை கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இரவில் மர்மவிலங்கு ஒன்று இழுத்து சென்றுவிட்டது.
அந்த பகுதியில் மழைபெய்த மறுநாள் நடந்த இந்த சம்பவத்தின் போது பதிந்த விலங்கின் கால்தடத்தை வைத்து வனத்துறையினர் கன்றுக்குட்டியை இழுத்து சென்ற விலங்கு எந்த வகையை சேர்ந்தது என்பதை தெரிவிக்காமல் உள்ளனர். மேலும் அந்த மர்மவிலங்கை அறிந்து கொள்ள அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்களையும் பொருத்திவிட்டு விலங்கை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர்.
விலங்கின் நடமாட்டம் அந்த பகுதியில் உள்ளது என்பதை உறுதி செய்த பின்னர் அறச்சலூர் பகுதியில் அமைந்துள்ள ஊர்களான கிழக்கு தலவுமலை, ஓம்சக்திநகர், சங்கரன்காடு, வேமாண்டம்பாளையம், வெள்ளிவலசு, ஊஞ்சப்பாளையம், பழைய பாளையம், முருங்க தொழுவு, மேற்கு தலவு மலை, கத்தக்கொடிக்காடு, மூலக்கடை, மீனாட்சி புரம், வீரப்பம்பாளையம், ஊசிப்பாளையம், நடுப்பாளையம் மற்றும் மலையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறும், இரவு நேரங்களில் எக்காரணம் கொண்டும் வெளியில் வரவேண்டாம் என ஒலிபெருக்கி வைத்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
கன்றுக்குட்டியை இழுத்துச்சென்ற விலங்கு எது? என்பது குறித்து வனத்துறையினர் இன்னும் அறிவிக்காத நிலையில் நேற்று அந்த விலங்கை பிடிக்க கூடுதலாக ஒரு கூண்டும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படங்களால் மக்கள் மிகுந்த பீதிக்குள்ளாகியுள்ளனர்.
அறச்சலூர் பகுதியை சேர்ந்த வக்கீல் ஒருவரின் தோட்டத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமிராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகியுள்ளதாகவும், அந்த புகைப்படத்தில் உள்ள பதிவு தேதிகள் 18 மற்றும் 19 என்றும் அத்துடன் புகைப்படம் எடுக்கப்பட்ட நேரமும் பதிவாகியிருந்ததால் மக்கள் வெளியான தகவலால் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இதனால் வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் மற்றும் கரும்பு பயிர்களுக்கான நீர்பாய்ச்சுதல் உள்ளிட்ட பணிகள் உயிர்பயம் காரணமாக நின்றுபோயுள்ளன.
இந்நிலையில் அறச்சலூரில் இருந்து கொடுமுடி நோக்கி பிரிந்து செல்லும் கீழ்பவானி கிளை சென்னசமுத்திரம் கிளை வாய்க்கால் கரையில் சிறுத்தையின் உருமல் சத்தத்தை தச்சங்காட்டு வலசை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் கேட்டுள்ளார்.
இதனை அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று சிறுத்தையை தேடி கொண்டுள்ளனர் என்ற தகவல் வாட்ஸ் அப்பில் வைரலானதை அடுத்து பீதி அறச்சலூரை கடந்து சுற்றுப்புற பகுதிகளையும் ஆட்கொண்டு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.