தெரு நாயை அடித்து கொன்று குடிநீர் தொட்டியில் வீசிய மர்மநபர்கள்- போலீசார் தீவிர விசாரணை
- குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து மீண்டும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- நாயை அடித்துக்கொன்று குடிநீர் தொட்டியில் வீசிய மர்மநபர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி கிராம ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 50-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஆட்டையான்வட்டம் பகுதியில் 5 கிராமங்களுக்கு அனுப்பும் வகையில் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்கும் வகையில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி 16.5 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
இந்த குடிநீர் தொட்டிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் காவிரி நீர் ஏற்றப்பட்டு இந்த தொட்டியில் இருந்து அருகில் உள்ள அங்கன்வாடி மையம், அரசு நடுநிலைப்பள்ளி, கொடியன் வளவு, ஆட்டையன்வளவு, கந்தாயி வட்டம், ஆரான்வட்டம், ஆப்பவட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கும் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. டேங்க் ஆபரேட்டராக அம்மாசி என்பவர் பணியாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் நேற்று தண்ணீர் தொட்டிக்குள் நாய் ஒன்று செத்து மிதந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் தாரமங்கலம் போலீசாருக்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி பணியாளர்கள் குடிநீர் தொட்டியில் செத்து மிகுந்த நாயை வெளியே எடுத்து போட்டனர். அதன் பிறகு குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து மீண்டும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடிநீர்தேக்க தொட்டியில் மர்மநபர்கள் அங்கு சுற்றி திரிந்த தெரு நாயை அடித்துக்கொன்று போட்டுள்ளது தெரியவந்தது.
எனவே நாயை அடித்துக்கொன்று குடிநீர் தொட்டியில் வீசிய மர்மநபர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மர்மநபர்களை உடனடியாக போலீசார் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் எதிர்காலத்தில் வேறு எங்கு வேண்டுமானாலும் இதுபோல் மீண்டும், மீண்டும் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தாரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.