மக்கள் நலனை நோக்கியே நாம் தமிழர் கட்சியின் சிந்தனை-செயல்பாடு இருக்கிறது: சீமான் பேச்சு
- இந்திய அரசு, இலங்கையுடன் செய்த 3 ஒப்பந்தங்கள் நம் இனத்துக்கு செய்த மிகப்பெரிய துரோகம்.
- பாராளுமன்ற தேர்தலில் தனித்துதான் போட்டியிடுவோம்.
தூத்துக்குடி:
நாம் தமிழர் கட்சி சார்பில் இனஎழுச்சி பொதுக்கூட்டம் தூத்துக்குடி புதூர்பாண்டியாபுரம் விலக்கு அருகே நேற்று நடந்தது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய அரசு, இலங்கையுடன் செய்த 3 ஒப்பந்தங்கள் நம் இனத்துக்கு செய்த மிகப்பெரிய துரோகம். தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கச்சத்தீவை மீட்க வேண்டும்.
விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கும், அதனை விற்றவர்களுக்கும் நிவாரணம் வழங்குகிறார்கள். இதை கேட்டால் குற்றவாளிகளுக்கும் குடும்பம் இருக்கிறது என்கிறார்கள். அப்படி என்றால் எல்லா குற்றவாளிகளுக்கும் நிவாரணம் கொடுத்து விட வேண்டியதுதானே. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?.
ஆனால், மக்களின் நலனை நோக்கித்தான் நாம் தமிழர் கட்சியின் சிந்தனை, செயல்பாடு இருக்கிறது.
பாராளுமன்ற தேர்தலில் தனித்துதான் போட்டியிடுவோம். வருகிற ஜூன் 13-ந் தேதி முதல் எனது சுற்றுப்பயணம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறது. டிசம்பரில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும். அதில் சட்ட விதிமுறைகள் வெளியிடப்படும். ஜனவரி முதல் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.