தமிழ்நாடு

பேச்சில் மட்டுமே பொது சேவை - பேரிடரில் இல்லையே கள சேவை

Published On 2023-12-19 14:54 GMT   |   Update On 2023-12-19 14:54 GMT
  • உலகின் சில நாடுகள் ஈடுபட துவங்கியும் உள்ளன.
  • தன்னார்வளர்கள் ஆற்றிய அயராத பணியால் மீண்டெழுந்தது.

உலகளவில் காலநிலை மாற்றம் காரணமாக இயற்கை பேரிடர்கள் மனித சக்தியால் கையாள முடியாத அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இதனை உண்மையாக்கும் சம்பவங்கள் மனித குலத்திற்கு தினந்தோறும் பாடம் கற்பித்துக் கொண்டே தான் இருக்கிறது. பல்வேறு நாடுகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பணிகளில் ஈடுபட்டும், சில நாடுகள் ஈடுபட துவங்கியும் உள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இம்மாத துவக்கத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி திணறிய சென்னை பொதுமக்கள், தன்னார்வளர்கள் ஆற்றிய அயராத பணியால் மீண்டெழுந்தது.

 

தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் மிக குறுகிய காலக்கட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக நான்கு மாவட்டங்களும் தனி தீவுகளாகின. இங்கும் வெள்ளத்தில் சிக்கித் திணறும் பொது மக்களை மீட்கும் பணிகளில் பொது மக்கள், தன்னார்வளர்கள், மத்திய மாநில அரசுகளின் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறை இயற்கை பேரிடர் ஏற்படும் போதும், பொதுமக்கள், தன்னார்வ தொண்டாளர்கள், பேரிடர் மீட்பு படையினர், ராணுவம் மற்றும் கடற்படை வீரர்களே மீட்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். எனினும், பொது மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் துவங்கப்பட்ட அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கி பணியாற்றும் வழக்கம் பொதுமக்கள் காணாத சம்பவமாகவே இருந்து வருகிறது.

 


பேரிடர் சமயங்களில் களமிறங்கி சேவையாற்றுவதில் ஏதேதோ காரணங்களால் தள்ளி நிற்கும் அரசியல் கட்சிகள் அரசு இதை செய்திருக்கலாம், இந்த பணிகளை மேற்கொண்டிருக்கலாம், போதுமான முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை, மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என பெரும்பாலும் குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளன.

குற்றச்சாட்டுகளால் அரசுக்கு குறைகளை சுட்டிக்காட்ட முடியும் என்றாலும், பொது மக்களுக்கு சேவையாற்ற துவங்கப்பட்ட அரசியல் கட்சிகள் இனியாவது களத்தில் இறங்கி மக்களுக்கு சேவையாற்றும் வழக்கம் நடைறைக்கு வருமா என்பதே பேரிடரில் சிக்கித் தவிக்கும் பொது மக்கள் மற்றும் அவர்களை நினைத்து வாடுவோரின் தற்போதைய மனநிலையாக உள்ளது.  

Tags:    

Similar News