நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளம் வடிய தொடங்கியது: மின்சாரம் துண்டிப்பால் பொதுமக்கள் அவதி
- தாமிரபரணி கரையோரம் வசித்த மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
- நெல்லையில் இருந்து நாகர்கோவில், சாத்தான்குளம், ராதாபுரம், திசையன்விளை, கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட தொடங்கின.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் சுமார் 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சி பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த அதி கனமழையின் காரணமாக மாநகர பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. கிட்டத்தட்ட ஒரு தீவு போல் மாநகர பகுதி முழுவதும் காட்சியளித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை தொடங்கி நேற்று மதியம் வரையிலும் பெய்த மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடியது. ஒருகட்டத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கும் வெள்ள நீர் புகுந்தது. மாநகர பகுதியில் உள்ள சுலோச்சன முதலியார் பாலம் உள்ளிட்டவற்றை தொட்டபடி வெள்ளம் சென்றன.
இதன்காரணமாக தாமிரபரணி கரையோரம் வசித்த மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த வெள்ளம் காரணமாக மாநகர பகுதிக்குள் முற்றிலுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தென்காசி, நாகர்கோவில், மதுரை, பாபநாசம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் இருந்தும் மாநகர பகுதிக்குள் வரும் சாலைகள் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று மதியத்திற்கு பிறகு மழை குறைந்ததால் வெள்ளம் மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. இன்று காலையில் மாநகரில் பிரதான நெடுஞ்சாலைகளில் வெள்ளம் வடிந்தது.
நாகர்கோவிலில் இருந்து வரும்போது டக்கரம்மாள்புரம், கே.டி.சி.நகர் பகுதி, மதுரையில் இருந்து வரும்போது தாழையூத்து பகுதி, தச்சநல்லூர் வழியாக சங்கரன்கோவில் சாலை, தென்காசியில் இருந்து வரும்போது பழையபேட்டை, கண்டியப்பேரி, வழுக்கோடை, தொண்டர் சன்னதி, ஆர்ச், ஸ்ரீபுரம் சாலை, சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், வண்ணார்பேட்டை வடக்கு மற்றும் தெற்கு பைபாஸ் சாலைகளில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம் அனைத்தும் முற்றிலுமாக வடிந்தது.
அதேநேரத்தில் சந்திப்பு பஸ் நிலையத்தில் நேற்று சுமார் 7 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி கிடந்தது. மழை வெள்ளம் செல்வதற்கு வழியில்லாமல் இருந்த காரணத்தினால் ரெயில் நிலையம் செல்லும் சாலை, மதுரை சாலை, ராஜாபில்டிங் சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளும் மூழ்கின. சந்திப்பு பஸ் நிலையத்தில் முதல் தளத்தை தொடும் வகையில் மழை வெள்ளம் தேங்கி கிடந்தது. இந்த வெள்ளமானது இன்று அதிகாலை 5 மணிக்கு 4 உயரத்திற்கு குறைந்தது. தொடர்ந்து காலை 9.30 மணி அளவில் முற்றிலுமாக தணிந்தது.
சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடைமேடைகள் முற்றிலுமாக மூழ்கிவிட்டதால் இன்று 2-வது நாளாக ரெயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை. சந்திப்பு பகுதியை ஒட்டி அமைந்துள்ள சிந்துபூந்துறை, மீனாட்சிபுரம், சி.என்.கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று படகு மூலமாக பொதுமக்கள் மீட்கப்பட்டனர். சில இடங்களில் மாடிகளில் இருந்த மக்களுக்கு படகு மூலம் உணவு வழங்கப்பட்ட நிலையில் இன்று அந்த பகுதிகளிலும் முற்றிலுமாக வெள்ளம் வடிந்துவிட்டது. ஆனால் டவுனை பொறுத்தவரை வெள்ளம் வடியவில்லை. டவுனில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட குறுகலான தெருக்களில் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்த நிலையில் அவை வெளியேறாமல் தொடர்ந்து தேங்கி கிடக்கிறது. டவுன் காட்சி மண்டபம் பகுதி, அங்கிருந்து சந்தி பிள்ளையார் கோவில் செல்லும் சாலைகளில் இடுப்பு அளவுக்கு மழைநீர் தேங்கி கிடக்கிறது.
பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் அதாவது பாளை பஸ் நிலையம், வ.உ.சி. மைதானம், ஆயுதப்படை சாலை, ஐகிரவுண்டு சாலை, அன்பு நகர், பெருமாள்புரம், பொதிகை நகர், ஆர்.டி.ஓ. அலுவலகம் சாலை, ரக்மத் நகர் 60 அடி சாலை, தியாகராஜநகர், மாருதி நகர், டி.வி.எஸ் நகர், சீனிவாச நகர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நேற்று தேங்கிய வெள்ளம் முற்றிலுமாக வடிந்ததை பார்க்க முடிந்தது.
இன்று வெள்ளம் வடிந்த நிலையில் 2 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் போக்குவரத்து மெல்ல மெல்ல ஓட தொடங்கி உள்ளது. மாநகர பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் மற்றும் அரசு பஸ்கள் ஒரு சில ஓட தொடங்கியது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடையம் செல்லும் பஸ்கள் சேரன்மகாதேவி, சங்கன்திரடு, முக்கூடல், பொட்டல்புதூர் வழியாக கடையம் செல்லும் வகையில் இயக்கப்பட்டது. பாபநாசம் செல்லும் பஸ்கள் வழக்கமாக செல்லும் வழித்தடமான சேரன்மகாதேவி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் வழியாக செல்கின்றன.
நெல்லையில் இருந்து நாகர்கோவில், சாத்தான்குளம், ராதாபுரம், திசையன்விளை, கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட தொடங்கின. மேலும் மதுரை, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் வெள்ளம் அதிக அளவு செல்வதாலும், அந்த பாலம் சற்று பலமிழந்து காணப்படுவதாலும் இரு புறங்களிலும் பேரிகார்டுகள் வைத்து சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் பஸ்கள் 4 வழிச்சாலை வழியாகவோ அல்லது சந்திப்பு, டவுன் ஆர்ச், நயினார்குளம் மார்க்கெட் வழியாக தச்சநல்லூர் சென்று அங்கிருந்து தாழையூத்து வழியாக நான்கு வழிச்சாலையில் செல்கிறது. தென்காசிக்கு இன்னும் பஸ் சேவை தொடங்கப்படவில்லை.
நெல்லை புதிய பஸ் நிலையத்தின் எதிரே உள்ள எஸ்.டி.சி கல்லூரி சாலை, பஸ் நிலையம் பின்புறம் உள்ள சேவியர் காலனியில் நீர் முற்றிலுமாக வடிந்துள்ளது. வடக்குப் புறவழிச்சாலை வாகனங்கள் செல்லும் வகையில் ஏதுவாக உள்ளன. ஆனால் இந்த சாலை வழியாக சங்கரன்கோவில் பஸ்கள் இவ்வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை. சந்திப்பு செல்லும் பஸ்கள் வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. உழவர் சந்தைகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது. ஒரு சில பகுதிகளில் மட்டும் மின்சாரம் இணைப்பு இன்னும் வழங்கப்படவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை மாநகர் மற்றும் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. குறிப்பாக ஒரு ஆண்டு முழுவதும் காயல்பட்டினத்தில் 95 சென்டிமீட்டர் மழை மட்டுமே பெய்யும் நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 93 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
தூத்துக்குடி மாநகரில் வழக்கமான மழையின்போது பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நிலையில், கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் மாநகர பகுதி முழுவதும் தீவாக மாறி உள்ளது. வீடுகளில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு படகு மூலமாகவும், ஹெலிகாப்டர் மூலமாகவும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு மழைநீர் வடிந்து இயல்பு நிலை திரும்ப ஒரு வாரம் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது.
மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் தாமிரபரணி ஆற்றில் வந்த வெள்ளத்தின் காரணமாக தீவுபோல் மாறியது. ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், கருங்குளம், ஆழ்வார்தோப்பு, முத்தாலங்குறிச்சி, வல்லநாடு அருகே வசவப்பபுரம், அகரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தது. அந்த பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மின்சார இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. மேலும் நெட்வொர்க் மற்றும் இணைய சேவை பாதிப்பின் காரணமாக செல்போனில் தொடர்பு கொள்ள முடியாத நிலை நிலவி வருகிறது.