ஏற்றுமதியில் புதிய சாதனை- ஈரோட்டில் 6 மாத காலத்தில் 1 லட்சம் டன் மஞ்சள் ஏற்றுமதி
- மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த மழையினால் மஞ்சள் தரம் குறைந்துள்ளதால் ஈரோடு மஞ்சளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.
- உலக அளவில் தேவை அதிகரிப்பால் கடந்த 6 மாத காலத்தில் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 22 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஈரோடு:
உலக அளவில் 80 சதவீதம் மஞ்சள் உற்பத்தி நடைபெறும் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 70 லட்சம் மூட்டைகள் மஞ்சள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலி, தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மற்றும் தமிழகத்தில் ஈரோடு என 3 இடங்களில் தேசிய அளவில் தரமான மஞ்சள் சந்தைகள் உள்ளன. தெலுங்கானா மாநிலத்திற்கு அடுத்து ஈரோட்டில் அதிக அளவில் மஞ்சள் உற்பத்தியும் விற்பனையும் நடைபெறுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக மஞ்சள் விலை சரிவடைந்த நிலையில், இந்த ஆண்டு உலக அளவிலும், உள்நாட்டிலும் தேவை அதிகரித்துள்ளதால் மஞ்சள் விற்பனை அதிகரித்துள்ளது.
அதிலும், மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த மழையினால் மஞ்சள் தரம் குறைந்துள்ளதால் ஈரோடு மஞ்சளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 3 மாதத்தில் விலை இரு மடங்கு உயர்ந்து ஒரு குவிண்டால் மஞ்சள் 15 ஆயிரம் ரூபாயை எட்டி உள்ளது.
இந்நிலையில் உலக அளவில் தேவை அதிகரிப்பால் கடந்த 6 மாத காலத்தில் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 22 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 86 ஆயிரத்து 92 டன் மஞ்சள் ஏற்றுமதியான நிலையில், இந்த ஆண்டு 6 மாத காலத்தில் 18 ஆயிரத்து 927 டன் அதிகரித்து 1 லட்சத்து 5 ஆயிரத்து 19 டன் மஞ்சள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது மஞ்சள் ஏற்றுமதியில் புதிய மைல் கல் என்றும் வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே போல், அடுத்த ஆண்டு பற்றாக்குறை ஏற்படும் என்ற எதிர்பார்பினால், உள்நாட்டு விற்பனையும் அதிகரித்து, பல நிறுவனங்கள் கூடுதலாக மஞ்சள் மூட்டைகளை வாங்கி இருப்பு வைப்பதாகவும் வணிகர்கள் கூறினர்.
பல ஆண்டுகளுக்கு இருப்பு வைத்து விற்பனை செய்யப்படும் மஞ்சள், தரமானதாக இருக்க, குளிர்பதன கிடங்குகளை அரசு அமைத்து தர வேண்டும் என மஞ்சள் வணிகர்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் மகாராஷ்டிர மாநிலத்திற்கு இணையாக தரமான மஞ்சள் ஆண்டு முழுவதும் ஈரோடு சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.