திருமணத்துக்கு முன்பு ஜல்லிக்கட்டு காளைக்கு மரியாதை செய்த புதுமண ஜோடி
- கலப்பின மாடுகளே அதிக அளவில் தமிழகத்தில் உள்ளது.
- பொதுமக்களும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை பெருமைப்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க வேண்டும்.
தருமபுரி:
தருமபுரி அருகேயுள்ள அ.கொல்லஅள்ளி வேடியப்பன் திட்டு பகுதியை சேர்ந்த விவசாயி சதீஷ்குமார்-பிரியங்கா, இவர்களுக்கு சென்னகேசவ பெருமாள் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
திருமண விழாவில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அதிக அளவில் தமிழகத்தில் நாட்டு மாடுகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாங்கள் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மரியாதை செய்த பிறகு திருமணத்தை நடத்தினர்.
கலப்பின மாடுகளே அதிக அளவில் தமிழகத்தில் உள்ளது. இதனால் நாட்டு மாடுகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் குறைந்த அளவே உள்ளது.
இதனை பாதுகாக்கும் வகையில் காளைகளுக்கு மரியாதை செய்த பிறகு தான் திருமணம் நடைபெற வேண்டும் என்று எங்கள் திருமணத்திற்கு முன்னதாகவே முடிவு செய்தோம்.
அதன்படி எங்கள் திருமணத்தின்போது நாங்கள் பாசமாக வளர்த்துவரும் ஜல்லிக்கட்டு காளை, பசு மாடுகளுக்கு பூமாலை அணிவித்து குங்குமத் திலகமிட்டு மரியாதை செலுத்திய பிறகு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.
மேலும் ஒவ்வொரு விவசாயிகளும் தங்கள் விவசாயத்துடன் சேர்த்து நாட்டு மாடுகளை வளர்த்து விவசாயத்தை பெருக்கி நமது பாரம்பரியத்தை காத்திட வேண்டும்.
அதுமட்டுமின்றி இளைஞர்களும். பொதுமக்களும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை பெருமைப்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.