நிபா வைரஸ் பரவல் எதிரொலி: புளியரை சோதனை சாவடியில் மருத்துவக்குழு பரிசோதனை தீவிரம்
- இன்றும் 2-வது நாளாக தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- கேரளாவில் இருந்து வரும் அந்த மாநில அரசு பஸ்களில் ஏறி, பயணிகளிடம் ‘நிபா’ வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
செங்கோட்டை:
கேரள மாநிலத்தில் 'நிபா' வைரசால் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு அதற்கான அறிகுறிகள் இருக்கலாம் என்ற அச்சமும் அங்கு நிலவி வருகிறது.
இதனால் தமிழகத்தில் கேரள மாநில எல்லைகளை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால் நிபா வைரஸ் தமிழகத்தில் பரவிடாமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் சுகாதாரத்துறையினர் நேற்று முதல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கேரளாவில் இருந்து புளியரை வழியாக தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை சாவடியில் நிறுத்தி அதில் இருப்பவர்களுக்கு உடல் வெப்பநிலையை கண்டறியும் கருவி மூலம் பரிசோதனை செய்து வருகின்றனர். இன்றும் 2-வது நாளாக தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக புளியரை சோதனை சாவடியில் ஒரு சுகாதார ஆய்வாளர், 2 உதவியாளர்கள் என 3 பேர் கொண்ட மருத்துவக்குழு சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். வாகனங்களில் வருபவர்களை பரிசோதனை செய்யும்போது ஏற்படும் வாக்குவாதங்களை தடுக்க பாதுகாப்புக்கு சுழற்சி முறையில் போலீசாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
மோட்டார் சைக்கிள், கார் என அனைத்து விதமான வாகனங்களிலும் வருபவர்களை நிறுத்தி உடல் வெப்பநிலை உள்ளிட்ட அனைத்து சோதனைகளும் கொரோனா பரிசோதனை போலவே மேற்கொள்ளப்படுகிறது. கேரளாவில் இருந்து வரும் அந்த மாநில அரசு பஸ்களில் ஏறி, பயணிகளிடம் 'நிபா' வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகிறது. பரிசோதனையில் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் புளியரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவர்களிடம் முகவரி பெறப்பட்டு தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள் என்றனர்.