தமிழ்நாடு

நித்யானந்தாவின் ஆன்மீக உரைகள் சிறப்பானவை - உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி

Published On 2024-09-04 11:43 GMT   |   Update On 2024-09-04 11:43 GMT
  • நித்யானந்தாவின் கதவைத் திற காற்று வரட்டும் என்ற தொடரில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளது என்று நீதிபதி தெரிவித்தார்.
  • காஞ்சி பெரியவர் கூறியது போல சந்நியாசி எப்போதும் சந்நியாசியாகவே இருக்க வேண்டும்.

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள 4 மடங்களின் மடாதிபதியாக நித்யானந்தாவை நியமிப்பதாக மடாதிபதி ஆத்மானந்தா அறிவித்தார்.

இந்நிலையில் பக்தர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த 4 மடங்களையும் நியமிக்க தக்காரை நியமித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தனது பெண் சீடர் உமாதேவிக்கு பொது அதிகாரம் வழங்கிய நித்யானந்தா இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உமாதேவிக்கு வழங்கப்பட்ட பொது அதிகார பத்திரத்தின் மீது சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த நித்யானந்தா ஆஜராக வேண்டும் என்று மனுதாரரிடம் நீதிபதி தெரிவித்தார்.

நித்யானந்தா இந்தியாவில் இல்லை. அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியும் அல்ல என்று மனுதாரர் பதில் அளித்தார். அதற்கு நீதிபதி, நித்யானந்தா எங்கிருக்கிறார் என்று தெரிய வேண்டும். அவரை காணொளி வாயிலாக ஆஜராக சொல்லுங்கள் என்று தெரிவித்தார். இதற்கு மனுதாரர் தரப்பில் அவர் ஆஜராக முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மடங்களை நியமிக்க தக்காரை நியமித்த இந்து சமய அறநிலையத்துறையின் உத்தரவில் தலையிட முடியாது என்று மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

மேலும், "நித்யானந்தாவின் ஆன்மீக உரைகள் சிறப்பானவை என்றும் நித்யானந்தாவின் கதவைத் திற காற்று வரட்டும் என்ற தொடரில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளதாகவும் காஞ்சி பெரியவர் கூறியது போல சந்நியாசி எப்போதும் சந்நியாசியாகவே இருக்க வேண்டும் என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

Tags:    

Similar News