தமிழ்நாடு
கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

வடமாநில பெண்ணுக்கு வளைகாப்பு விழா கறி விருந்து- ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்

Published On 2023-03-14 09:55 GMT   |   Update On 2023-03-14 09:55 GMT
  • சூளையில் வேலை பார்த்து வரும் பொறி என்பவரது மனைவி தோனியம்மா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
  • சுற்றுவட்டார பகுதியில் வேலை பார்க்கும் எங்களது உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடையம் அருகே உள்ள வடக்கு மடத்தூர் என்ற கிராமத்தில் உள்ள பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் கொல்கத்தாவை சேர்ந்த 7 குடும்பத்தினர் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர்.

அந்த சூளையில் வேலை பார்த்து வரும் பொறி என்பவரது மனைவி தோனியம்மா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு நேற்று வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கடையம் சுற்றுவட்டார பகுதியிலுள்ள கோவிந்தபேரி, மாதாபுரம், செக்போஸ்ட் என பல்வேறு பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளில் வேலை பார்த்து வரும் அவரது உறவினர்கள் கலந்து கொண்டனர். அவர்களது சடங்குப்படி வளைகாப்பு விழா நடைபெற்றது.

தொடர்ந்து சிக்கன், மட்டன் என கறி விருந்து நடைபெற்றது. மேலும் பலவண்ண மின் விளக்குகள், ஒலிப்பெருக்கிகள் உள்ளிட்டவைகளை அங்கு கட்டி திருவிழா போல் அமைத்திருந்தனர். வளைகாப்புக்கு பின்னர் வடமாநில தொழிலாளர்கள் நடனம் மூலம் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து வடமாநில தொழிலாளி பொறி கூறுகையில், நான் தமிழகம் வந்து பல ஆண்டுகள் ஆகிறது. இங்கேயே வேலை பார்த்து வருகிறேன். தற்போது எனது மனைவி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு இன்று வளைகாப்பு நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டார பகுதியில் வேலை பார்க்கும் எங்களது உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இங்கு மிகவும் சந்தோஷமாக வளைகாப்பு விழா கொண்டாடினோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லை என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிரப்பட்டு வந்த நிலையில், தற்போது இங்கு சுதந்திரமாக நடந்த வளைகாப்பு விழா அவர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செங்கல் சூளை உரிமையாளர் பாலமுருகன் செய்திருந்தார்.

Tags:    

Similar News