தமிழ்நாடு

திருவள்ளூர் பஸ் நிலையத்தில் நடைபாதையில் ஆக்கிரமிப்பு கடைகள்: பயணிகள் கடும் அவதி

Published On 2023-11-18 07:43 GMT   |   Update On 2023-11-18 07:43 GMT
  • நகராட்சிக்கு சொந்தமான கடைக்காரர்கள் தங்களது எல்லையை தாண்டி நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனர்.
  • கடை முன்பு நிற்கும் பயணிகளை ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் திட்டுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, திருப்பதி, திருத்தணி, ஆவடி, ஊத்துக்கோட்டை, செங்குன்றம், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெங்களூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு விழுப்புரம் கோட்ட அரசு பஸ்கள், மாநகர பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் பயணிப்பதற்காக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலர்கள், பணியாளர்கள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் திருவள்ளூர் பஸ் நிலையம் வந்து செல்கின்றனர்.

திருவள்ளூர் பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடப்பட்டு அவற்றின் மூலம் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகை வாடகையாக வசூல் செய்யப்படுகிறது. ஆனால் நகராட்சிக்கு சொந்தமான கடைக்காரர்கள் தங்களது எல்லையை தாண்டி நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனர். இதனால் வெளியூர், உள்ளூர் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பஸ் நிலையத்துக்கு கைக்குழந்தையுடன் வரும் பெண்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என பலரும் மழையிலும், வெயிலிலும் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடை முன்பு நிற்கும் பயணிகளை ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் திட்டுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். கடையை மறைத்து நின்றால் வியாபாரம் பாதிக்கிறது என்று கூறுகிறார்கள். இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகிறார்கள். எனவே, திருவள்ளூர் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை நிரந்தமாக அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News