தமிழ்நாடு

ஈரோடு மாநகர் பகுதியில் 80 வழிபாட்டு தலங்களில் திருவிழா நடத்த அனுமதி: அதிகாரிகள் தகவல்

Published On 2024-03-29 06:56 GMT   |   Update On 2024-03-29 06:56 GMT
  • தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கோவில் விழாக்கள் நடத்திட முறையாக அனுமதி பெற வேண்டும்.
  • திருமண மண்டபங்களில் எந்த ஒரு நிகழ்ச்சி நடத்தினாலும் முறையாக அனுமதி பெற வேண்டும்.

ஈரோடு:

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. தற்போது தேர்தல் நடத்த விதிமுறைகள் அமலில் உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் தற்போது பங்குனி மாதம் என்பதால் அனைத்து கோவில்களிலும் திருவிழாக்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் நடக்கும் திருவிழாக்களுக்கு தேர்தல் பிரிவு அலுவலகத்தில் அனுமதி பெற்று நடத்திட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

அதேபோல் திருமண மண்டபங்களில் திருமணம், திருமண வரவேற்பு, வளைகாப்பு, காதுகுத்து உள்ளிட்ட எந்த வகையான நிகழ்ச்சிகள் நடத்தினாலும் தேர்தல் பிரிவு அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். இதன் பேரில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் பிரிவு அலுவலகத்தில் கோவில், சர்ச், மசூதிகளில் விழாக்கள் நடத்திட அனுமதி பெற அதன் நிர்வாகிகள் ஏராளமானோர் விண்ணப்பித்து அனுமதி பெற்று செல்கின்றனர்.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கோவில் விழாக்கள் நடத்திட முறையாக அனுமதி பெற வேண்டும். கோவில் நிர்வாகிகள் அனுமதிகேட்டு விண்ணப்பிக்கும்போது, அதன் உண்மை தன்மை ஆராய்ந்து உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறு அனுமதி பெற்று கோவில் விழாக்கள் நடத்தும்போது, அவர்கள் எப்போது போல ஒலி பெருக்கிகள் வைத்து நிகழ்ச்சி நடத்தலாம்.

ஆனால் அங்கு எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரித்தோ அல்லது வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொள்ளவும் கூடாது. அவ்வாறு செயல்பட்டால் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேப்போல் திருமண மண்டபங்களில் எந்த ஒரு நிகழ்ச்சி நடத்தினாலும் முறையாக அனுமதி பெற வேண்டும்.

ஈரோடு மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் இதுவரை சர்ச், ரம்ஜான் பண்டிகையொட்டி மசூதியில் சிறப்பு தொழுகை நடத்துவது, ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் திருவிழா உள்ளிட்ட 80 மத வழிபாட்டு தலங்களில் விழாக்கள் நடத்திட அனுமதி வேண்டி விண்ணப்பிக்கப்பட்டதில் 80 மத வழிபாட்டு தலங்களிலும் விழாக்கள் நடத்திட தேர்தல் விதிமுறைகளின்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News