தமிழ்நாடு (Tamil Nadu)

திருவள்ளூர் நகராட்சியில் 1,600 நிறுவனங்கள்-கடைகள் தொழில் வரி பாக்கி: அதிகாரிகள் எச்சரிக்கை

Published On 2023-11-23 08:43 GMT   |   Update On 2023-11-23 08:43 GMT
  • திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 2 ஆயிரத்து 914 தொழில் நிறுவனங்கள் உள்ளன.
  • நகராட்சியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் வருகிற 30-ந் தேதிக்குள் தொழில் வரி செலுத்த வேண்டும்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. வீடுகள், வணிக வளாகம், அரசு கட்டடங்கள் என, 12 ஆயிரத்து 724 சொத்து வரி விதிக்கப்பட்ட கட்டடங்கள் உள்ளது. சொத்து வரியாக ஆண்டுக்கு ரூ.8 கோடியே 21 லட்சத்து 77 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல் காலிமனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை, வாடகை உள்ளிட்ட வகையில், நகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ. 11 கோடியே 38 லட்சத்து 87 ஆயிரம் வரி வசூலாக வேண்டும். இதில் வசூலாகும் தொகையில், 50 சதவீதம், நகராட்சி ஊழியர்களின் சம்பளம், மின் கட்டணம், அலுவலகம், வாகனங்களின் பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்கு செலவாகிறது. மீதம் உள்ள தொகை மட்டுமே நகர வளர்ச்சிக்கு செலவிடப்படுகிறது. இந்த நிலையில் நகராட்சியில் உள்ள சுமார் 800 கடைகள், வணிக நிறுவனங்கள் தொழில் வரி செலுத்துவதில்லை.

இதையடுத்து நகராட்சி வருவாய் அலுவலர் கருமாரியப்பன், பொறியாளர் நடராஜன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜூ தலைமையிலான நகராட்சி ஊழியர்கள், கடைகள் தோறும் சென்று தொழில் வரி செலுத்துவதற்கான விண்ணப்பத்தினை விநியோகம் செய்தனர். வருகிற 30-ந்தேதிக்குள் சொத்துவரி செலுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சுரேந்திர ஷா கூறியதாவது:-

திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம், 2 ஆயிரத்து 914 தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில்1,245 தொழில் நிறுவனங்கள் மட்டுமே தொழில் வரி செலுத்தி வருகின்றன. மீதம் உள்ள 1,669 தொழில் நிறுவனங்கள், கடைகள் தொழில் வரி செலுத்தாமல் உள்ளனர்.

பொதுமக்களிடம் சொத்து வரி, குடிநீர், பாதாள சாக்கடை கட்டணம் என, வசூலாகும் நிதியில் தான் நகராட்சியில் நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்கள் தொழில் வரி செலுத்தாததால், நகராட்சிக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், மக்கள் நலத்திட்ட பணிகளை செய்ய முடியாத நிலை உள்ளது.

எனவே, நகராட்சியில் உள்ள, வணிக நிறுவனங்கள், கடைகள் வருகிற 30-ந் தேதிக்குள் தொழில் வரி செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், அபராதம் விதிக்கப்படுவதுடன், வணிக நிறுவனங்களுக்கு 'சீல்' வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News